வேண்டுவோருக்கு வேண்டிய வரம் தரும் ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன், மேற்கு தாம்பரம்
பதிவு செய்த நாள்
24
ஜூலை 2025 01:07
மேற்கு தாம்பரம் நகரில், முத்துரங்கம் பூங்கா என்று அழைக்கப்படும் பூங்காவானது, 75 ஆண்டுகளுக்கு முன், கருவேல மரங்களும், முள்செடிகளும் நிறைந்த திறந்தவெளி பகுதியாக இருந்தது. பழைய தாம்பரத்தை சேர்ந்த ஒருவர், தான் வளர்த்து வந்த பசுவை தேடி வந்த போது, இப்பூங்காவில் தென்மேற்கு பகுதியில் பாம்பு புற்றை பார்த்து, அதன் அருகில் பசு இருப்பதை கண்டவுடன், புற்றை வணங்கி, பசுவுடன் வீடு திரும்பினார். அதன்பின், நாள்தோறும் புற்றை வணங்க தொடங்கி, வெள்ளிக் கிழமைகளில் பெண்களும், பக்தர்களும் விளக்கேற்றி வணங்கி வந்தனர். பின், நாளடைவில் புற்று சிறிது சிறிதாக வளர தொடங்கியது. அதன்பின், ஊர் பெரியவர்கள், பக்தர்கள் சேர்ந்து திறந்த வெளியில் இருந்த பாம்பு புற்றுக்கு கீற்று கொட்டகை, நான்கு புறம் மூங்கில் தட்டி அமைத்து, வழிபாடு நடத்தி வந்தனர். நாளடைவில், பக்தர்கள், குறிப்பாக பெண்கள் அதிகளவில் வந்து விளக்கேற்றி புற்றுக்கு பால் ஊற்றி வழிபட தொடங்கினர். இந்த நிலையில், பொதுமக்கள், நகர முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள் அனைவரின் ஒத்துழைப்புடனும், ஜெயராம நாயுடு என்பவரின் பெரு முயற்சியாலும் சிறிய மண்டபம் அமைத்து, திரு ராஜகோபால் பிள்ளை என்பவரை பூசாரியாக நியமித்தனர். காலை மற்றும் மாலை நேரத்தில் பூஜை நடைபெற தொடங்கியது. சுயம்பாக புற்று வடிவில் தோன்றி, வேண்டுவோருக்கு வேண்டிய வரம் தந்தருளும் அம்மனை ஸ்ரீ நாகேஸ்வரி அம்மன் என்ற திருநாமத்துடன் சிலை வடிவில் மக்கள் வழிபட தொடங்கினர். 1973 முதல் பக்தர்கள் ஒன்று கூடி, காப்பு கட்டி, வேப்பஞ்சேலை அணிந்து, தீச்சட்டி ஏந்தி, அம்மனுக்கு கூழ் ஊற்றி, தீ மிதி திருவிழா இன்று வரை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1984ல், ஸ்ரீ நாகேஸ்வரி அம்மனுக்கு ஆகம விதிப்படி, காஞ்சி காமகோடி பீடாதிபதி மகா பெரியவர் அருளாசி யுடன், மூலவர் பிரதிஷ்டையும், மகா கும்பாபிேஷகமும் நடந்தேறியது. 1990ல், மகா பெரியவர் நல்லாசியுடன், உற்சவர் பிரதிஷ்டை, சிறப்பு ேஹாமம் நடந்தது. 1994ல், கோவில் கருவறை விமானம் அமைத்து, காஞ்சி காமகோடி விஜயேந்திர சுவாமிகள் ஆசியுடன் கும்பாபிேஷகம் நடந்தது. 1999 முதல் ஆடி மாதத்தில், 10 நாட்கள் பிரம்மோத்சவம் நடக்கிறது. காலை, சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை, மதியம், அன்னதானம், மாலை, சிறப்பு ேஹாமம், சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் வீதி உலா வந்து, 3வது வார ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி, அலகு அணிந்து, பக்தி பரவசத்துடன், தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். திருத்தேரில் அம்மன் அலங்காரத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது. 2001ல், இக்கோவிலுக்கு என்று ஜெயராம் நாயுடு அவர்கள் தல வரலாறு பாடல் ஒன்றை இயற்றியுள்ளார். 2006ல், கோவிலின் முகப்பு வாசல் கலை நயமிக்க மகாமண்டபத்துடன் கும்பாபிேஷகம், திருப்பனந்தாள் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ முத்துகுமாரசுவாமி தம்பிரான் திருக்கரங்களால் சிறப்பாக நடைபெற்றது. 2007 முதல் மாதந்தோறும் பவுர்ணமி அன்று, காலை, சிறப்பு அபிேஷகம், மதியம், அன்னாதானம், மாலை, சிறப்பு ேஹாமம், உற்சவருக்கு அபிேஷக அலங்காரம், தீபாராதனை நடைபெற்று, இரவு நேர ஜோதி தரிசனம் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த 2018ல் மகா மண்டபத்தை புனரமைத்து, கலை நயத்துடன் கூடிய துாண்கள், கொடி மரம் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன், பிரத்தியங்கராதேவி, சமயபுரம் மாரியம்மன், காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி, பால திரிபுர சுந்தரி, காஞ்சி காமாட்சி, ஸ்ரீ வராஹி, பேச்சியம்மன், பச்சையம்மன் ஆகிய சிலைகள் சுதைவடிவில் அமைக்கப்பட்டுள்ளன. வெளி பிரகாரத்தில், ஸ்ரீ சீனிவாச பெருமாள், பால் முனீஸ்வரர், சப்த கன்னியர்கள், கனக துர்கை, நாக தேவதை ஆகியவை, திருப்பனந்தாள் காசிமடத்து ஆதீனம் கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ முத்துகுமரசாமி தம்பிரான் தலைமையில், ஆகம முறைப்படி கும்பாபிேஷகம். சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களால் வழங்கப்பட்ட கோமாதா நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு, விசேஷ நாட்களில் அவற்றிற்கு கோ பூஜை செய்து, நாள்தோறும் அபிேஷக அலங்காரம், நித்தியபடி பூஜை, அர்ச்சனை, தீபாரதனை ஆகியவை நடத்தப்படுகின்றன. இக்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளை, அர்ச்சகர் சத்யா என்பவர், பக்தி உணர்வோடு சிறப்பாக நடத்தி வருகிறார். இக்கோவிலை, ஜெயராம நாயுடுவின் மகன் விஷ்னுராம், தர்ம கர்த்தாவாக இருந்து சிறப்பான முறையில் நடத்தி வருகிறார். கோவில் திறக்கும் நேரம் : காலை 6:00 மணி முதல் 12:00 மணி. மாலை 5:00 மணி முதல் 8:00 மணி வரை முகவரி: மேற்கு தாம்பரம், முத்துரங்கம் பூங்கா தொடர்புக்கு: 9840308502 – 9444556812
|