திருக்கழுக்குன்றம்; திருக்கழுக்குன்றம் திரிபுரசுந்தரி அம்மன், ஆடிப்பூர உத்சவமாக, திருத்தேரில் வீதியுலா சென்றார். திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. சுவாமியின் அம்பாளாக, திரிபுரசுந்தரி அம்மன் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அம்மனுக்கு ஆண்டுதோறும் நடக்கும் ஆடிப்பூரம் உத்சவம், கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து, அம்மன் தினமும் உத்சவ சேவையாற்றி, வீதியுலா செல்கிறார். மூன்றாம் நாள் உத்சவமாக, கடந்த 21ம் தேதி, அதிகார நந்தியில் அம்மன் எழுந்தருளி, வேதகிரீஸ்வரர் கோவில் மலைக்குன்றை கிரிவலம் சென்றார். ஏழாம் நாள் உத்சவமாக, இன்று காலை திருத்தேரில் எழுந்தருளி, காலை 6:50 மணிக்கு உலா புறப்பட்டது. பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். மாடவீதிகள் வழியே கடந்து, 9:45 மணிக்கு, தேர் நிலையை அடைந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். வரும் 29ம் தேதி இரவு, மூலவர் அம்மனுக்கு முழு மஹா அபிஷேகம், திருக்கல்யாணம் நடக்கிறது. பஞ்சமூர்த்தி சுவாமியர் எழுந்தருள்கின்றனர்.