பதிவு செய்த நாள்
27
ஜூலை
2025
07:07
மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், 54வது ஆண்டு ஆடிப்பூர விழா, நேற்று கோலாகலமாக துவங்கி, நாளை வரை நடக்கிறது.
மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பூர விழா நடைபெறும். இந்தாண்டு, 54வது ஆண்டு ஆடிப்பூர விழா, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கலச விளக்கு வேள்வி பூஜையுடன் நேற்று துவங்கியது. இதைத்தொடர்ந்து, ஆடிப்பூர விழாவையொட்டி, ஆதிபராசக்தி அம்மன் மற்றும் பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பின், பங்காரு அடிகளார் திருப்பாதுகைகளுக்கு பாத பூஜையும், சுயம்பு அம்மனுக்கு கஞ்சி வார்த்தலும் நடந்தது. இதில், செவ்வாடை பக்தர்கள், கஞ்சி கலயம் எடுத்து வந்து, அம்மனை வழிபட்டனர். அதன் பின், சுயம்பு அன்னைக்கு பாலாபிஷேக விழாவை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர், காலை 11:00 மணிக்கு துவக்கி வைத்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், இந்திய விமான படை ராஜஸ்தான் பிரிவைச் சேர்ந்த லிங் கமாண்டர், ‘ட்ரம்ஸ்’ கலைஞர் சிவமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, நீண்ட வரிசையில் வந்த செவ்வாடை பக்தர்கள், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இவ்விழாவில், தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று, உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயம்புத்துார், திருப்பூர் மாவட்டங்களின் நிர்வாகிகள் மணி, கிருஷ்ணமூர்த்தி, சரஸ்வதி சதாசிவம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பாலாபிஷேகம், இன்று மாலை வரை நடக்கிறது.