சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் வருடம்தோறும் ஆடி மாதம் தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான திருவிழாவிற்காக இன்று அதிகாலை ஆனந்தவல்லி அம்மனுக்கு 18 வகையான பொருள்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் கோயிலில் முன் மண்டபத்தில் எழுந்தருளினார்.இதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஹோமங்கள் வளர்த்து காலை 9:32 மணிக்கு கொடியேற்ற பூஜைகளை துவங்கினர் 10:05 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்ற பின்னர் அபிஷேக,ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்றது. விழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம்,அன்னம்,கமலம்,கிளி,யானை, காமதேனு,விருஷபம்,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகபடிகளுக்கு எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா வருகிற ஆக.6ம் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானீகர் சோமசுந்தர பட்டர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.