திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் கொடுத்த தகவலின்படி, திருப்பூர் வீர ராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர் ரவிக்குமார் மற்றும் பொன்னுச்சாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து ரவிக்குமார் கூறியாவது: புதுப்பாளையம் பொன் அழகுநாச்சியம்மன் கோவில் அருகே, நிலத்தில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்ட கல்வெட்டு, கி.பி.1803-ல் பொறிக்கப்பட்டதை அறிய முடிகிறது. 55 செ.மீ. அகலமும், 135 செ.மீ. உயரமும் கொண்ட இக்கல்வெட்டில் 16 வரிகளில் தமிழ் எழுத்துகள் உள்ளன. கி.பி.1803ம் ஆண்டு தமிழ் ருத்ரிரோற்காரி ஆண்டு கார்த்திகை மாதம் 19ம் தேதி, ஸ்ரீஅப்பாச்சிராயர், ராயராக இருந்த சுப நாளில் புதுப்பாளையம் மணியம், வெங்கிடசுப்பையன், சிவகிரிப்பிள்ளை, பொன்தட்டான், அழகப்பகவுண்டன் ஆகியோர் கூடி, அழகு நாச்சியம்மனுக்கு, இரண்டு வள்ளம் காடு மானியமாக அளித்த செய்தியை நாம் அறிய முடிகிறது. நடுவயக்காடு தோட்டத்தில், 30 செ.மீ. அகலமும் 60 செ.மீ. உயரமும் கொண்ட, கல்வெட்டில், சந்திரன் -சூரியன் முத்திரை, தர்மசக்கரத்தின் மையத்தில் சூலத்துடன், மற்றும் பூ மாலையுடனும் கூடிய மூன்று வரிக்கல்வெட்டு எழுத்துக்கள் முழுமை பெறாத நிலையில் உள்ளது. குடிகிணற்றுத் தோட்டத்தில், பண்டைய தமிழ் மக்கள் வழிபட்ட கன்னிமார், தாய் தெய்வச் சிற்பம் ஒன்று 125 செ.மீ. அகலத்திலும், 45 செ.மீ. உயரத்திலும் காணப்படுகிறது. வலது காலைத் தொங்கவிட்டு, இடது காலை மடித்துச் சுக ஆசனத்தில் அமர்ந்தபடி, இடது கையை இடது தொடைமேல் வைத்து, வலது கையில் மலர்ச் செண்டு ஏந்தி அருள் பாலிக்கும், கன்னிமார் சிற்பத்தில், கி.பி.19ம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று வரித் தமிழ்க் கல்வெட்டு காணப்படுகிறது. ‘துன்மதி ஆண்டு மார்கழி 24ம் தேதி, பல்லடம் தாலுகா, காமநாயக்கன்பாளையத்திலிருக்கும் (காப்பாளையத்திலிருக்கும்) பெரியண்ண கவுண்டர் மகன் கருமான்டக்கவுண்டன் இதைச் செய்து வைத்துள்ளதை நாம் அறிய முடிகிறது. இதன்வாயிலாக, இடைக்கற்காலம் முதல் இன்று வரை புதுப்பாளையம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளும், பல நுாறு ஆண்டுகளாக மக்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை வளமைக்காக, தாய் தெய்வத்தைப் போற்றி வழிபட்டதை நாம் அறிய முடிகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.