பக்தர்கள் தங்கும் வாலாஜாபாத் சத்திரத்தில் கல்வெட்டு கண்டெடுப்பு
பதிவு செய்த நாள்
31
ஜூலை 2025 11:07
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் பார்வேட்டைக்கு வரும் நபர்கள் தங்குவதற்குரிய வாலாஜாபாத் சத்திரத்தில், 196 ஆண்டுகள் முந்தைய கல்வெட்டு நேற்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய தலைவர் அஜய்குமார் கூறியதாவது: காஞ்சிபுரம் – செங்கல்பட்டு செல்லும் சாலையில், வாலாஜாபாத் ராஜவீதியில், உத்சவ மண்டபம் உள்ளது. இம்மண்டபம் பாழடைந்த நிலையில் உள்ளது. உள்ளே சென்று பார்த்த போது, 196 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்வெட்டு நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், சாலிவாக சகாப்தம் ஆண்டு -4930, கலி ஆண்டு -1751, தமிழ் விரோதி ஆண்டு ஆவணி- 10ம் நாளில், வாலாஜாபாதில் இருக்கும் ஆற்காடு ரிஷி கோத்திரம், கோவிந்தராவ் என்பவரின் மகன்கள் மனோஜிராவ்; சேதுராவ் ஆகியோர் உத்சவ மண்டபத்தை கட்டியுள்ளனர். இந்த உத்சவ மண்டபம் கிழக்கில் இருந்து மேற்கு வரையில், 193 அடி நீளமும், தெற்கு வடக்கில், 230 அடி அகலமும் குளத்துடன்கூடிய சத்திரம் உள்ளது. இந்த சத்திரத்திற்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சங்கராந்தி என அழைக்கப்படும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று பார்வேட்டை உத்சவத்திற்கு வரும் பக்தர்கள் தங்கிவிட்டு செல்வதற்கு ஏற்ப, சத்திரம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சத்திரத்தை பராமரிக்கும் செலவிற்கு, வல்லப்பாக்கம் பகுதியில் ஆறு காணி நஞ்சை நிலம். நாலு காணி புஞ்சை நிலம் என, பத்து காணி நிலத்தில், கால் பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏக்கர் கணக்கீட்டின் படி பார்த்தால், 3.325 ஏக்கர் பரப்பு நிலத்தை பராமரிப்பு செலவிற்கு ஒதுக்கீடு செய்துள்ளனர் என, கல்வெட்டு மூலமாக தெரிய வந்துள்ளன. இதை, தொல்லியல் உதவி கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன், தொல்லியல் உதவி கண்காணிப்பாளர் ரமேஷ், விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் உறுதிபடுத்தி உள்ளனர். இதை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, பாழடைந்து கிடக்கும் சத்திரத்தை புதுப்பித்து, பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
|