புத்தரின் நினைவு சின்னங்கள் கொண்டு வரப்பட்டது பெருமை: பிரதமர் மோடி
பதிவு செய்த நாள்
31
ஜூலை 2025 02:07
புதுடில்லி: புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவு சின்னங்கள், 127 ஆண்டுகளுக்கு பின் நம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது பெருமைக்குரியது என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய - நேபாள எல்லைக்கு அருகில், தற்போதைய உத்தர பிரதேசத்தில் உள்ள பிப்ரஹ்வாவில் இருந்த பழங்கால ஸ்தூபியை அகழ்வாராய்ச்சி செய்தபோது, 1898ல் புத்தரின் நினைவுசின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. புத்தரின் புனித நகைகள், பவுத்த மதத்தில் சரீரமாக எரிக்கப்பட்ட புத்தரின் சாம்பல்கள், எலும்புகள், ரூபி, மாணிக்கம், சபையர் மற்றும் தங்கத் தகடுகள் நினைவு சின்னங்களாக கருதப்பட்டன. இவை, காலனித்துவ ஆட்சியின் போது, நம் நாட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன. இந்த நகைகள், கடந்த மே 7ல் ஹாங்காங்கில் நடக்கவிருந்த, சோத்பைஸ் நிறுவன ஏலத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டன. இந்த நினைவுச் சின்னம், மத்திய அரசின் பல கட்ட போராட்டத்துக்கு பின், இந்தியா எடுத்துவரப்பட்டன. இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுசின்னங்கள், 127 ஆண்டுகளுக்கு பின், நம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மிகவும் பெருமையான விஷயமும் கூட. ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமை சேர்க்கும். இந்த புனித நினைவுச்சின்னங்கள், புத்தர் மற்றும் அவரது உன்னத போதனைகளுடனான இந்தியாவின் நெருங்கிய தொடர்பை எடுத்துக்காட்டுகின்றன. இந்த நினைவுசின்னம் நம் நாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது, நம் புகழ்பெற்ற கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பாதுகாப்பதற்கு, மத்திய அரசு எடுக்கும் உறுதிப்பாட்டை விளக்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
|