காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டை கிராமத்தில் மூலஸ்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், தெற்கு திசை நோக்கி உள்ளது. கருவறையில், உற்சவர் மூலஸ்தம்மன் பிரதான தெய்வமாக விளங்கி வருகிறார். மூலஸ்தம்மன் எல்லை தெய்வமாக இருப்பதால், இக்கோவிலை, வாழ் முனி நாயக்கர் குடும்பத்தினர் கட்டி நிர்வகித்து வருகின்றனர். அவரது முன்னோர்கள் காலத்தில் இருந்து, ஆடி மாதம் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை தினத்தில், ஆடித்திருவிழா நடந்து வருகிறது. அதே வழியில், வாழ்முனி நாயக்கரின் பேரன் ஆர்.வீ.ரஞ்சித்குமார் குடும்பத்தினர் ஆண்டுதோறும் ஆடி திருவிழாவை வெகுவிமரிசையாக செய்து வருகிறார். நடப்பாண்டு ஆடி திருவிழா ஆக., 3ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, இன்று ஜலம் திரட்டும் நிகழ்ச்சி, காப்பு கட்டப்பட உள்ளது. மறு நாள் கரகம் துாக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆக., 3ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பிறகு, பகல் கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு மலர் அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன. ஒவ்வொரு ஆண்டும், மூலஸ்தம்மனுக்கு வெவ்வேறு அலங்காரங்கள் நடக்கின்றன. இது, சூரிய, சந்திரன் இருக்கும் வரையில், ஆடி திருவிழா தடையின்றி நடைபெறும். இதை என் குடும்பத்தினர் செய்வார் என, என் தாத்தா வாழ்முனி நாயக்கர் கூறி உள்ளார். என் தாத்தாவின் காலத்திற்கு பிறகு, 2,000ம் ஆண்டில் திருவிழா செய்ய என் குடும்பத்தினருடன் துவங்கினேன். இது, என் காலத்தில் நடக்கும் 25வது ஆண்டு வெள்ளி விழா திருவிழாவாகும். எங்களின் முன்னோர்களின் ஆசியுடன், மன நிறைவாக செய்து வருகிறேன் என ஆர்.வீ.ரஞ்சித்குமார் தெரிவித்தார்.