கீழக்கரை; கீழக்கரை அருகே ஸ்ரீ நகரில் பத்ரகாளியம்மன் கோயிலில் 25ம் ஆண்டு ஆடிப் பொங்கல் உற்ஸவம் நடந்தது. ஜூலை 27ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆக.,1ல் ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் கீழக்கரை சித்தி விநாயகர் கோயிலில் இருந்து மறவர் தெரு, அன்பு நகர், கோகுலம் நகர் வழியாக அம்மன் கரகம், அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் பக்தர்கள் வீதி உலா வந்தனர். பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை உத்தரகோசமங்கை நாகராஜன் பட்டர் செய்திருந்தார். நேற்று ஊர் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் முளைப்பாரி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீநகர், சிவகாமிபுரம், மீனாட்சிபுரம் வழியாக கீழக்கரை மீனவர் குப்பம் கடற்கரையில் பாரி கங்கை சேர்க்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீநகர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.