சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற முதல் தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2025 11:08
சேலம்; பிரசித்தி பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா முன்னிட்டு முதன்முதலாக தேரோட்ட வைபவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆடி மாதம் என்றாலே சேலம் மாவட்டத்தில் அம்மனுக்கு உகந்த மாதம் 8 பேட்டைக்கும் நாயகியாக விளங்கக்கூடிய சேலத்து மகாராணி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் பூச்சாட்டுகளுடன் தொடங்கியது சக்தி அளித்தல் அக்னி கரகம் பூங்கரகம் அழகு குத்துதல் உள்ளிட்ட சிறப்பு வைபவங்கள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பொங்கல் வைத்தல் ஆடு கோழி பலியிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்
கோட்டை மாரியம்மன் ஆடி திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் திருவீதி உலா கடந்த சில வருடங்களாகவே பல்லக்கில் வைத்து ஊர்வலம் நடைபெற்றது. இதனை அடுத்து பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க தேரில் நகர் வலம் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த ஆண்டு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோட்டை மாரியம்மன் கோவில் தேர் செய்யப்பட்டு கடந்த மாதம் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சேலம் கோட்டை மாரியம்மனுக்கு முதன் முதலாக தேரோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. முன்னதாக மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு பால் இளநீர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு உற்சவமூர்த்தியான கோட்டை அம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்தனர். தொடர்ந்து வேதங்கள் முழங்க மந்திரங்கள் அர்ச்சனைகள் நடைபெற்றன. பின்னர் திருத்தேரில் எழுந்தருளியுள்ள கோட்டை மாரியம்மன் க்கு மகாதீபார தனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. அப்போது பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சேலத்து மகாராணி கோட்டை மாரியே நமோ நமக என விண்ணை முட்டும் அளவிற்கு கோஷங்கள் எழுப்பினர். இந்த தேரானது முதல் அக்ரஹாரம், இரண்டாவது அக்ரஹாரம், சின்ன கடைவீதி வழியாக வந்து கோவில் வளாகத்தில் நிறைவடைந்தது. கோவிலின் முன்பு தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது.
முன்னதாக தேரோட்டத்தின் போது பம்பை வாத்தியம், செண்டை மேளம், நாதஸ்வரம்இசைக்கப்பட்டன. பெண்கள் நாட்டிய நிகழ்ச்சிகளும் கோலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களுடன் முன் செல்ல கோட்டை மாரியம்மன் தேர் வலம் வந்தது. திருத்தேரை அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நின்றிருந்த தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.