மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுகிறோம். அப்போது, ஸ்ரீரங்கத்தின் நினைவுஎழுகிறது. ஸ்ரீரங்கம் என்றாலே பரமபதவாசல் திறப்பு திருவிழா மட்டும்தான் பெரிய விழா என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இங்கு சித்திரை, தை, பங்குனி மாதங்களில் பிரம்மோற்ஸவம் சிறப்பாக நடத்தப்படும். சத்திய லோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப் படுகிறது. இதை, ஆதி பிரம்மோற்ஸவம் என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திர நட்சத்திரத்தில், சுவாமி, ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, ராமர் கொண்டாடிய விழா தை மாதம் நடக்கிறது. இவ்விழா, பூமியை ஆண்ட ராமன் நடத்திய விழா என்பதால், பூபதி திருநாள் எனப்படுகிறது. இதை ராமரே நடத்துவதாக ஐதீகம்.