எல்லாக் கோயில்களிலும் நெய் தீபம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவார்கள். ஆனால், ரங்கநாதர் கோயிலிலுள்ள மருத்துவக்கடவுளான தன்வந்திரி சந்நிதியில், நோய் நீங்க வேண்டி விளக்கெண்ணெய் தீபம் ஏற்றுகிறார்கள். தன்வந்திரி தனது மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார். இவருக்கு தயிர் சாதம் படைப்பது மரபு. வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு சாத்தப்படும் புனுகை இவரே கொடுக்கிறார். அது மட்டுமா! ரங்கநாதருக்கு படைக்கப்படும் நைவேத்யம் ஜீரணமாக, சுக்கு, வெல்லக் கலவையும் இவரே தருவதாக ஐதீகம்.