ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன. அவ்வாறு, பல்லடம், பனப்பாளையம் விநாயகர், மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக, ஊருக்கு எல்லையில் உள்ள நாட்டாங்கல்லுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள், சீர்வரிசையாக கொண்டு வந்த பொருட்களை, நாட்டாங்கல்லுக்கு முன்பாக வைத்து, கும்மியாட்டம் ஆடியபடி வழிபட்டனர். தொடர்ந்து, பெண் குழந்தைகள் ஏழு பேருக்கு மாலை அணிவித்து, சப்த கன்னியராக பூஜித்தனர். அங்கிருந்து, சீர்வரிசைகள் அனைத்தும் ஊர்வலமாக மாகாளி அம்மன் கோவிலுக்கு எடுத்துவரப்பட்டன. உற்சவமூர்த்தி மாகாளி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. சிறப்பு வளையல் அலங்காரத்தில், மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாவித்தார்.