குன்னூர்; அருவங்காடு விநாயகர் கோவிலில், இன்று ஆவணி அவிட்டம் விழா நடந்தது.
நம் நாட்டில் பிராமணர்களின் மிக முக்கிய வேத சடங்கு நாளாக ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது. இதை உபகர்மா எனவும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் பூணூல் மாற்றிக் கொள்வது மிக முக்கியமான சம்பிரதாயமாக கருதப்படுகிறது. வேதங்களை கற்பித்தலை துவங்கும் நாளாகவும், ஆன்மிக புதுப்பித்தலுக்கான நாளாகவும் ஆவணி அவிட்டம் கருதப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆவணி அவிட்டம், இன்று ஆடி பெளர்ணமி மற்றும் ஹயக்ரீவர் ஜெயந்தியுடன் இணைந்த நாளில் கொண்டாடுவது சிறப்பு பெற்றது. இதனையொட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அருவங்காடு விநாயகர் கோவிலில், நேற்று ஆவணி அவிட்டம் விழா நடந்தது. விழாவில், அருவங்காடு, குன்னூர், ஊட்டி, வெலிங்டன் உட்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் பூணுால் அணிந்தனர். ஹோமம் வளர்க்கப்பட்டு, காண்டரிஷி தர்ப்பணம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டன. பிராமணர் சங்க தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். கோவில் அர்ச்சகர் மகேஷ்வரன் பூஜைகளை நடத்தினார். உலக நன்மைக்காக இன்று (9ம் தேதி) 1008 முறை காயத்ரி மந்திரம் பாராயணம் செய்யப்படுகிறது.