தசரா யானைகளுக்கு உடல் எடை சரிபார்ப்பு; அம்பாரி அபிமன்யுவை விட பீமா பலசாலி
பதிவு செய்த நாள்
12
ஆக 2025 12:08
மைசூரு; மைசூரு தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க முதல்கட்டமாக வந்துள்ள ஒன்பது யானைகளுக்கு, நேற்று உடல் எடை கணக்கிடப்பட்டது. அம்பாரியை சுமக்கும் அபிமன்யுவை விட பீமா யானை பலசாலி என்பது தெரிய வந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா அடுத்த மாதம் 22ம் தேதி துவங்கி, அக்டோபர் 2ம் தேதி வரை 12 நாட்கள் நடக்க உள்ளது. தசராவின் கடைசி நாளில் ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். மைசூரு அரண்மனை வளாகத்தில் இருந்து 750 கிலோ எடை கொண்ட, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் தங்க அம்பாரியை சுமந்தபடி ஒரு யானை செல்ல, மற்ற யானைகள் பின் தொடர்ந்து செல்லும். அம்பாரி சுமக்கும் அபிமன்யு தலைமையில், எட்டு யானைகள் கடந்த 4ம் தேதி வனப்பகுதியில் இருந்து, மைசூரு அசோகபுரத்தில் உள்ள வன பவனுக்கு முதல்கட்டமாக அழைத்து வரப்பட்டன. நேற்று முன்தினம் வன பவனில் இருந்து, மைசூரு அரண்மனைக்கு முறைப்படி அழைத்துச் செல்லப்பட்டன. நடைபயிற்சி நேற்று காலை ஒன்பது யானைகளுக்கும் உடல் எடை சரிபார்க்கப்பட்டது. மைசூரு டவுன் சாயாஜிராவ் ரோட்டில் உள்ள, லாரி பாரம் சரிபார்க்கும் எடைமேடைக்கு ஒன்பது யானைகளும், அரண்மனையில் இருந்து நடைபயணமாக அழைத்துச் செல்லப்பட்டன. யானைகளுக்கு உடல் எடை சரிபார்க்கப்பட்ட பின், வன அதிகாரி பிரபுகவுடா அளித்த பேட்டி: தசராவில் பங்கேற்க வந்துள்ள ஒன்பது யானைகளுக்கும், உடல் எடை சரிபார்க்கப்பட்டது. ஒன்பது யானைகளும் ஆரோக்கியமாக உள்ளன. கடந்த முறை தசராவில் பங்கேற்றுவிட்டு வனத்திற்கு அனுப்பியபோது, என்ன எடை இருந்ததோ அதே எடையில் யானைகள் உள்ளன. யானைகளின் உடல்நிலை, ஆரோக்கியத்தை அறிய எடை கணக்கிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் யானைகளுக்கு என்ன மாதிரியான உணவு, புரதங்கள் வழங்க வேண்டும் என்பது பற்றி, கால்நடை மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்துவோம். அம்பாரியை சுமக்கும் அபிமன்யுவை விட, பீமா யானை உடல் எடை அதிகமாக உள்ளது. நேற்று முதல் யானைகளுக்கு நடைப்பயிற்சி ஆரம்பமாகி உள்ளது. காலையில் இரண்டு மணி நேரம் 10 கி.மீ., மற்றும் மாலையில் இரண்டு மணி நேரம் 10 கி.மீ., என, ஒரு நாளைக்கு 20 கி.மீ., நடைப்பயிற்சி அளிக்கப்படும். யானைகள் காலில் ஆணி உள்ளிட்ட இரும்புத் துண்டுகள் குத்திவிடக் கூடாது என்பதால், யானைகள் நடைப்பயிற்சி செல்லும் இடத்தில் காந்தம் பொருத்திய ஜீப் வழக்கம்போல் செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
|