திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா விமரிசை
பதிவு செய்த நாள்
12
ஆக 2025 12:08
பொன்னேரி; திருவேங்கிடபுரம், பொன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பொன்னேரி அருகில் உள்ள திருவேங்கிடபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன்கோவிலில், 46ம் ஆண்டு ஆடித்திருவிழா, கடந்த, 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை, கரகம் புறப்படுதல், கூழ்வார்த்தல் விமரிசையாக நடந்தது. பகல், 2:00 மணிக்கு பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து, வழிபட்டனர். மாலை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபஆராதனைகள் நடந்தன. இரவு, வாணவேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலா நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், கிராமம் முழுதும் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருத்தணி திருத்தணி பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஜாத்திரை விழா நடக்கிறது. விழாவை ஓட்டி நேற்று காலை, 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று ஜாத்திரை விழா மாலை, 4:00 மணிக்கு பூ கரகம் பைபாஸ் சாலையில் இருந்து ஊர்வலமாக தணிகை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்கு வந்தடையும். இரவு, 7:00 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூ கரகத்துடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதே போல் திருத்தணி மேட்டுத்தெரு எல்லையம்மன், அக்கைய்யாநாயுடு சாலை தணிகாசலம்மன், எம்.ஜி.ஆர்., நகர் எல்லையம்மன், பெரியார் நகர் அம்மன், சுப்பிரமணிய நகர் துர்க்கையம்மன், காந்தி நகரில் உள்ள துர்க்கையம்மன். ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள சக்தி அம்மன் மற்றும் புறவழிச்சாலையில் உள்ள, ஆதிபராசக்தி அம்மன் உள்பட திருத்தணி நகராட்சியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களில் இன்று ஜாத்திரை விழா நடக்கிறது.
|