சிவாஜிநகர்; சிவாஜிநகர் ஓம் சக்தி கோவிலில், ஆடிப்பூரம் திருவிழா வரும் 15ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.
பெங்களூரு சிவாஜிநகர் ஷெப்பிங்ஸ் சாலையில், ஓம் சக்தி கோவில் உள்ளது. இக்கோவிலில் 40வது ஆண்டு ஆடிப்பூரம் திருவிழா, வரும் 15ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை, மூன்று நாட்கள் நடக்கிறது. துவக்க நாளான 15ம் தேதி காலை 6:00 மணிக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்படும். காலையில் சக்தி கொடி ஏற்றி, அம்மனுக்கு காப்பு கட்டப்படும். காலை முதல் இரவு வரை, பக்தர்கள், பொதுமக்களின் கைகளால் அம்மன் சிலைக்கு, பால் அபிஷேகம் நடக்கிறது; பக்தர்களுக்கு காப்பு கட்டப்படுகிறது. இரவில் மஹா மங்களாரத்தி நடக்கிறது. பின், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும் 16ம் தேதி காலையில் 108 நதிகளின் புனிதநீரால், அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. விழாவின் நிறைவு நாளான 17ம் தேதி மதியம் கஞ்சி, கூழ் வார்ப்புடன் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் 108 தீச்சட்டி; 51 வேப்பிலை கரகம் மற்றும் பூ கரகங்களுடன், ஓம் சக்தி அம்மன், பிரித்யங்கரா தேவி மற்றும் வராஹி அம்மன் தேர் ஊர்வலம் நடக்கும். இரவில் மஹா மங்களாரத்திக்கு பின், அன்னதானம் வழங்கப்படும். மூன்று நாட்கள் நடக்கும் திருவிழாவில், பொதுமக்கள், பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி அம்மன் அருள் பெற்றுச் செல்லும்படி, கோவில் நிறுவனர் மற்றும் தலைவர் சக்தி டி.சண்முகம் அழைப்பு விடுத்துள்ளார். பூஜை ஏற்பாடுகளை சக்தி எஸ்.சுந்தரி, கோவில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்து உள்ளனர்.