திருநள்ளாறு சக்தி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2025 03:08
காரைக்கால்; காரைக்கால் அடுத்த திருநள்ளாறு பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா 65ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் தீக்குழியில் இறங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த 08ம்தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன் விமரிசையாக தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா இன்று விமரிசையாக நடைபெற்றது. 65ஆண்டுகளுக்கு பிறகு தீமிதி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு மூலவர் ஸ்ரீசக்தி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரித்த உற்சவர் மாரியம்மன் வீதியுலாவாக வந்து தீக்குழி முன்பு எழுந்தருளினார். கோவில் கரகத்தை பின் தொடர்ந்து பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற தீக்குழியில் இறங்கி ஸ்ரீமாரியம்மனை வழிபட்டனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசித்தனர்.