நாகதோஷம் நிவர்த்தியாகும் ஸ்ரீ புற்று நாகாத்தம்மன்
பதிவு செய்த நாள்
15
ஆக 2025 03:08
மணலிபுதுநகரின் மையப் பகுதியான, 57வது பிளாக் பகுதியில், காவல் தெய்வமாகவும், சுயம்பு உருவான புற்றுடன் அழகிய ஆலயமாக விளங்குகிறது ஸ்ரீ புற்று நாகாத்தம்மன் கோவில். பக்தர்களால், புற்று கோவில் என்றழைக்கப்படும் இக்கோவில் ஆதியில், சிறு குடிசையில் புற்று மேடை மீது, விளக்கேற்றி வழிபட்டு வந்துள்ளனர். இன்று, மூல ஸ்தானம், அர்த்த மண்டபம், மஹா மண்டபம் மற்றும் பரிவார மூர்த்தி களுடன் பிரமாண்ட வளர்ச்சி பெற்றாலும், புற்று மேடை மட்டும், அம்மனின் விருப்பப்படி, ஓலை குடிசையிலேயே அமைந்துள்ளது. நம் வேண்டுதலை வைத்து, புற்றை சுற்றி வந்து வழிபடும் போது, அன்னையை நாக வடிவில் காண முடிகிறது என்பது நிதர்சனமாக உண்மை. இக்கோவில் தனிச்சிறப்பாக, வடகிழக்கில் அமைந்துள்ள வேம்பு – அரச மரத்தில் நாகத்தின் உருவமானது தானாக தோன்றி, காட்சியளிக்கிறது. இன்றும் அந்த அருட்காட்சியை காண முடிகிறது. இக்கோவிலில் மாதந் தோறும், பவுர்ணமி தினத்தில், நவகலச ஹோமம், சிறப்பு அபிஷேகம், ஊஞ்சல் சேவையும் நடக்கிறது. மேலும், நாகதோஷம், திருமண தடை, குழந்தை பாக்கியம், நில பிரச்னை மற்றும் நீதிமன்ற வழக்கு போன்ற வற்றில் சாதமாக சூழல் ஏற்பட, செவ்வாய் கிழமைகளில் அம்மனிடத்தில் எலுமிச்சை பழம் வைத்து, ஒன்பது வாரம் பிரார்த்தனை செய்தால், வேண்டியது நிறைவேறும். குழந்தை வரம் வேண்டும் பக்தர்கள், அம்மனுக்கு பச்சை நிற வளையல், முத்து வளையல் சாற்றி, அதை பிரசாதமாக வாங்கி அணிந்து கொள்கின்றனர். அப்படி அணியும் பக்தர்களுக்கு, மூன்று மாதங்களில் குழந்தை வரம் பெறுகின்றனர். பலன் அடைந்தவர்கள், புற்று நாகாத்தம்மனுக்கு, வளைகாப்பு செய்து, ஜடை செய்து, சாற்றி நன்றிக் கடன் செலுத்துகின்றனர். திருமண தடை உள்ள பக்தர்கள், புற்றின் அருகில் அமைந்திருக்கும் நாக சிலைக்கு, ராகு காலத்தில் ஒன்பது வாரம், தங்கள் கைகளாலே அபிஷேகம் விளக்கேற்றி வந்தால், திருமண வரன் கைகூடுகிறது. அவர்கள் அம்பாளின் சன்னதிலேயே திருமணம் செய்த சாட்சிகளும் உள்ளன. ஆடி மாதம் கடைசி வாரத்தில், பால்குடம் ஊர்வலம், அம்மனுக்கு கூழ் வார்த்தல் வைபவம் வெகு விமரிசையாக நடக்கும். கோவி ல் அர்ச்சகர் கணேஷ் சிவம் 7305459293 கோவில் தர்மகர்த்தா வி.எம்.ராதா 9940312241 கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 7:00 – 11:00 மணி மாலை 5:30 – 8:00 மணி வெள்ளி மற்றும் விசேஷ தினங்களில் காலை 7:00 – 12:00 மணி மாலை 5:3 0 – 8:00 மணி
|