பொருள் மீதான ஆசை போக்கும் ஸ்தலம்
பதிவு செய்த நாள்
15
ஆக 2025 03:08
சோழ மண்டலத்தின், காவிரிபூம்பட்டினத்தில், சிவநேசர் – ஞானகலா தம்பதிக்கு, இரண்டாவது மகனாய் பிறந்தவர் திருவெண்காடர். சிவபக்தரான இவர், கடல் கடந்து வாணிபம் செய்யும் தொழில் செய்து வந்தார். தனது, 16 வயது வயதில், சிவகலை என்ற பெண்ணை மணந்தார். இந்த தம்பதிக்கு பிள்ளை பேறு கிடையாது. எனவே, குழந்தை வேண்டி திருவெண்காடர் சிவ பெருமானை வழிபட்டார். இதனிடையே, சிவசருமர் – சுசீலை என்ற மற்றொரு சிவபக்த தம்பதிக்கு, சிவனே மகனாக பிறந்தார். குழந்தைக்கு மருதவாணர் என பெயரிட்டு வளர்த்தனர். சிவனுக்கு சேவை செய்து வறுமையில் வாடிய தம்பதியால், குழந்தையை சரியாக வளர்க்க முடியவில்லை. திருவெண்காடர் மற்றும் சிவசருமர் தம்பதிக்கு இறைவன் அருள் செய்ய எண்ணம் கொண்டார். அதன்படி, சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை, திருவெண்காடருக்கு தத்துக் கொடுத்து, பதிலாக பொருள் பெற்றுக் கொள்ளும் படி கூறினார். அதே சமயம் திருவெண்காடர் கனவில் தேன்றிய சிவன், மருதவாணரை வளர்க்கும் படி கூறினார். அதன்படி, மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார் திருவெண்காடர். மருதவாணரும், தந்தையின் வாணிப தொழிலை மேற்கொண்டார். ஒரு சமயம் மருதவாணர் கடல் கடந்து வாணி பம் செய்து விட்டு ஊர் திரும்பினார். தனது தாயிடம் பெட்டி ஒன்றை மட்டும் கொடுத்து விட்டு, ஒன்றும் சொல்லாமல் வீட்டை விட்டு சென்று விட்டார். இந்நிலையில், வெளியே சென்றிருந்த திருவெண்காடர் வீடு திரும்பியதும், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியை திறந்த பொழுது, அதில், வறட்டி இருந்தது. கோபம் கொண்டார். பின், பெட்டியில் இருந்த ஓலைச் சுவடி ஒன்றை எடுத்து படித்த போது, அதில், காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என எழுதப்பட்டிருந்தது. மனிதன் எவ்வளவு தான் சம்பாதித் தாலும், கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியை கூட கையில் கொண்டு செல்ல முடியாது என்பதையும், தத்துப்பிள்ளை, தத்துவப்பிள்ளையானதை உணர்ந்து, அதன் மூலம் ஞானம் பெற்றார். பின், திருவெண்காடர் இல்லறம் துறந்து, பட்டினத்தாராக துறவு பூண்டார். சீர்காழி, சிதம்பரம் என பலர் ஊர் சுற்றித்திரிந்து பல பாடல்கள் பாடினார். வட மாநிலமான உ ஜ்ஜயினிக்கு சென்ற போது, விநாயகர் கோவில் ஒன்றில் தவம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது, அரசவையில் பொருட்களை திருடிய திருடர்கள், நவமணி மாலை ஒன்றை, விநாயகருக்கு காணிக்கையாக வீசி சென்றனர். அது தவத்தில் இருந்த பட்டினத்தார் மீது விழுந்ததது. அரசவை காவலாளிகள் பட்டினத் தாரை கள்வன் என நினைத்து, கழுமரத்தில் ஏற்ற, கழுமரம் பற்றி எரிந்தது. அரசன் பத்ரகிரியார், பட்டினத்தாரின் சீடரானார். திருவிடைமருதுாரில் சில காலம் இருவரும் தங்கியிருந்தனர். சிவன் பத்ரகிரியாருக்கு முதலில் காட்சி கொடுத்து, முக்தி கொடுத்தார். பட்டினத்தார் தனக்கும் முக்தி வேண்டும் என வேண்டினார். பின், இறைவன் பேய்கரும்பின், நுனி கரும்பு இனிக்கும் இடத்தில் முக்தி தருவதாக கூறினார். பல தலங்களுக்கு சென்று கடைசியாக, திருவொற்றியூருக்கு வந்த பட்டினத்தாருக்கு நுனிகரும்பு இனித்ததால், இங்கு முக்தி பெற்றார். அதன்படி, மீனவ சிறுவர்களுக்கு, மணலை சர்க்கரையாக மாற்றிக் கொடுத்தார். பின், தன்னை கூடையை போட்டு கவிழ்க்கும் படி கூறி, மற்றொரு இடத்தில் தோன்றி அச்சிறுவர்களை ஆச்சரியப்படுத்தினர். இருமுறை கூடையை கவிழ்த்த போது, மற்றொரு இடத்தில் தோன்றிய பட்டினத்தார். மூன்றாவது முறை கூடையை கவிழ்த்த போது, லிங்கமாகி விட்டார். பிற்காலத்தில், கோவில் எழுப்பி வழிபட்டு வருகின்றனர். சன்னதி முகப்பில், 27 நட்சத்திர தீபங்கள் உள்ளன. நெய்தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷம். இவருக்கு அபிஷேகம் செய்து தரப்படும் விபூதியை உட்கொண்டால், பிணி நீங்குவதாக நம்பிக்கை. இவர் முக்தி பெற்ற ஆடி, உத்திராடம் நட்சத்திரத்தில், குருபூஜை வெகு விமரிசையாக நடக்கும். பட்டினத்தார், துறவு பூண்டதால், இங்கு நேர்த்திக்கடன் கிடையாது. பிரார்த்தனை நிறைவேறினால் வேண்டிக் கொண்டதை நிறைவேற்றுகின்றனர். வேண்டுவோருக்கு, அறிவான குழந்தை மற்றும் பொருள் மீதான ஆசையை போக்கும் வரம் தருகிறார். குபேரனே பூலோகத்தில் சிவதரிசனம் செய்வதற்காக , பட் டினத்தாராக பிறந்ததாக சொல்வர். ஆகவே, இவரிடம் வேண்டிக் கொண்டால், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்பது நம்பிக்கை. நடை திறந்திருக்கும் நேரம் : காலை 7:00 – 12:00 மணி, மாலை 4:00 – 8:00 மணி வரை இடம்: திருவொற்றியூர் குப்பம், எண்ணுார் விரைவு சாலை, திருவொற்றியூர் – திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் உள்ளது. தொடர்புக்கு : 044 – 25733703
|