தஞ்சாவூர்; கரூர் அருகே சங்கரன் மலையில் வரலாற்று ஆய்வாளர்களால், மூன்றாம் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலக தமிழ் பண்டிதரும், வரலாறு, தொல்லியல் மற்றும் சுவடியியல் ஆய்வாளருமான மணிமாறன் கூறியதாவது: கரூர் மாவட்டம், சித்தலவாய் சங்கரன்மலையில் உள்ள சவுந்தரநாயகி உடனுறை சங்கரேஸ்வரர் கோவில் அமைந்துள்ள பகுதியின் தென்புறத்தில், 220 அடி உயரத்தில், இரண்டு பாறை பிளவுகளுக்கு இடையில், 10 அடி உயரம், 12 அடி அகலத்திற்கு, 23 வரிகள் கொண்ட, இரண்டு கல்வெட்டுகளும், மலையில் தரைமட்டத்தில்,ஒரு கல்வெட்டும் கண்டறியப்பட்டன. இதில், கோவில் திருப்பணிக்கும், அமுது படிக்கும் வெஞ்சனத்திற்கும் நிலம் தானமாக வழங்கப்பட்ட செய்தி குறிப்புகள் இருந்தன. மேலும், கொடையாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள், நிலம் வழங்கப்பட்ட செய்தியும், மண்டப விநியோகம், ஓலை சம்புடம், வேலைக்கார சிவகணங்கள், கார்த்திகை படி, வெண்ணெய், எண்ணெய், செக்கிறை வழங்கியதை, கல்லிலும், செம்பிலும் வெட்டி வைக்கப்பட்டு இருந்தன. இக்கல்வெட்டுகள், மூன்றாம் குலோத்துங்க சோழனின், 12, 18ம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டவை. இவ்வாறு, அவர் கூறினார்.