சென்னை ஏகாம்பரேஸ்வரருக்கு தங்க கிரீடம்; 21ம் தேதி கும்பாபிஷேகம்
பதிவு செய்த நாள்
19
ஆக 2025 11:08
மின்ட்; ஏகாம்பரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது. சென்னையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று பூங்கா நகர் தங்கசாலையில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில். திருமண வரம், வீடு வாங்கும் யோகம் ஆகியவற்றை தருவதால் இக்கோவில் மிகவும் பிரபலம். இது பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா, வரும் 21ம் தேதி நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, கடந்த 12ம் தேதி கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. இன்று காலை 7:30 மணிக்கு விசேஷ சந்தி, பாவனாபிஷேகம் சிவப்பு சாத்துப்படி அலங்காரம் 2ம் கால யாகசாலை பூஜை, பாராயணம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, உள்ளிட்டவை நடக்க உள்ளன. இதையொட்டி, முற்பகல் 11:30 மணி மற்றும் மாலை 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்க உள்ளன. கும்பாபிஷேக தினமான, 21ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, அவபிருத்த யாகம், விசேஷ திரவ்யாஹுதி; 5:45 மற்றும் 7:30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி; காலை 7:45 மணிக்கு யாத்ராதானம், தசதானம், கலசங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. இதையடுத்து, காலை 8:15 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். இதையடுத்து, காலை 9:00 மணிக்கு, விநாயகர், மூலவர், உற்சவர் உள்ளிட்ட அனைத்து மூர்த்திகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். நண்பகல் 12:30 மணிக்கு, மஹாபிஷேகம் திருப்பாவாடை; இரவு 7:00 மணிக்கு ஏகாம்பரேஸ்வரருக்கும், காமாட்சியம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 9:00 மணிக்கு, விசேஷ வாத்தியங்களுடன் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடக்க உள்ளது. இதில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, இறைபணி மன்றமான ஏ.கே.ஏ., அண்டு இ டிவைன் சர்வீஸ் சொசைட்டி மற்றும் கோவில் நிர்வாகிகள், அறங்காவலர்கள் மேற்கொண்டுள்ளனர். தங்க கிரீடம்; சவுகார்பேட்டை தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சங்கம் சார்பில், உற்சவமூர்த்திக்கு தங்க கிரீடம்; மூலவர் காமாட்சி அம்மனுக்கு தங்க பந்தனம் என, ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ஆபரணங்கள் செய்யப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதை சமர்ப்பிக்கும் நிகழ்வு நேற்று காலை நடந்தது. ஆபரணங்கள் மல்லீஸ்வரர் கோவிலில் இருந்து ஊர்வலமாக ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வர ப்பட்டது.
|