திருத்தணி; முருகன் கோவிலில் நடந்த ஆடிக்கிருத்திகை விழாவின் நிறைவு நாளான நேற்று, மூன்றாம் நாள் தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருத்தணி முருகன் கோவிலில், 14 -18ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று அதிகாலை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்ககிரீட ம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் மலைக்கோவிலில் இருந்து, திருக்குளத்தில் அமைக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து, குளத்தில் ஏழு முறை வலம் வந்து, உற்சவ பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பத்திருவிழாவை காண திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 60,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் படியில் தேங்காய் உடைத்து, பூஜை செய்து வழிபட்டனர். நேற்றுடன் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா நிறைவடைந்தது. கடந்த 14ம் தேதி முதல் நேற்று வரை, மூன்று லட்சம் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து மூலவரை த ரிசித்துள்ளனர் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.