சென்னை; பூங்கா நகர், தங்க சாலை தெருவில் உள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம், இன்று கோலாகலமாக நடந்தது.
பூங்கா நகர், தங்கசாலை தெருவில் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட, 600 ஆண்டுகள் பழமையான காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், ஒன்றரை ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தன. கோவிலில், ஏழுநிலை ராஜகோபுரம், வரவேற்பு மண்டபம், உத்சவர் மண்டபம் மற்றும் விமானம் உள்ளிட்டவை, சேலம் மற்றும் திருச்செங்கோடில் இருந்து பிரத்யேகமாக கருங்கற்கள் வரவழைக்கப்பட்டு, பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கிழக்குபுறம் ஏகாம்பரேஸ்வருக்கான கொடிமரமும், தெற்குபுறம் தாயாருக்கான கொடிமரமும், செம்பு தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில், பரிவார மூர்த்திகளின் சன்னிதிகள் உட்பட, 10 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் முடிக்கப்பட்டன. தொடர்ந்து, இம்மாதம் 12ம் தேதி கணபதி பூஜையுடன், கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கின. நேற்று காலை, மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, கலசங்கள் புறப்பாடாகின. பின், 8:15 – 8:45 மணிக்குள், ராஜகோபுரம், விமானங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, கூடியிருந்த ஏராளமான பக்தர்கள், ‘நமச்சிவாயா’ என விண்ணதிர முழங்கினர். தொடர்ந்து, விநாயகர், மூலவர், உத்சவர் உட்பட அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இக்கோவில் திருப்பணிகளை, ‘ஏ.கே.ஏ., அண்டு இ டிவைன் சர்வீஸ் சொசைட்டி’ இறைபணி மன்றம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இறைபணி மன்ற தலைவர் எம்.டி.பாலாஜி, செயலர் சுரேஷ், துணை தலைவர் நரேந்திர குமார், சண்முகம், ஏ.கே.மணி, பொருளாளர் மோகன், துணை செயலர் சசிகலா, நரேஷ் மற்றும் திருக்கோவில் நிர்வாகம் – அறங்காவலர் குழுவினர் பங்கேற்றனர்.