வடிவங்கள் பல கொள்வான் ஓங்கார ஸ்வரூபன்
பதிவு செய்த நாள்
22
ஆக 2025 03:08
விநாயகர், ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளும், வடிவமுமாய் திகழ்கிறார். பிரணவ மந்திரம் அகரம், உகரம், மகரம் எனும் மூன்று எழுத்துகளால் ஆனது. ‘அ’ என்பது படைத்தல் தொழிலுக்குரிய பிரம்மாவையும், ‘உ’ என்பது காத்தல் தொழிலுக்குரிய விஷ்ணுவையும், ‘ம’ என்பது அழித்தல் தொழிலுக்குரிய சிவனையும் குறிக்கும். இதனால்தான், மூன்றிற்கும் மூலமாகவும், முத்தொழில்களின் அம்சமாகவும், மும்மூர்த்திகளின் சொரூபமாகவும் விளங்குபவரான விநாயகரை முதலில் வழிபட்ட பின்பே, மற்ற தெய்வங்களுக்கு செய்யும் வழிபாடு பூர்த்தியாகிறது. வரும் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்று, விநாயகர் சிலைகள் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படும். ஓரிருநாள் வழிபாட்டுக்குப் பின் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இதற்காக, திருப்பூரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. விநாயகரின் உருவம் கலைஞர்களின் திறனுக்கேற்ப நுாற்றுக்கணக்கான வடிவங்களில் சிலைகளாக வெளிப்படுகிறது. பிற கடவுளர் உருவங்களுக்கு வரையறுக்கப்பட்ட வடிவங்கள் உண்டு. இதற்கு விதிவிலக்கு விநாயகர் மட்டுமே. எத்தகைய வடிவத்திலும், விநாயகர் முழுமையாக உள்ளே வந்து நிலைகொள்கிறார். இதனால்தான், வடிவங்களுக்கெல்லாம் அப்பால் நிலைகொள்கிறார். ஓங்கார ஸ்வரூபனாக விரிகிறார். கல்லில், மண்ணில், கண்ணாடியில், உலோகத்தில், மரத்தில், பீங்கானில் என அவரது வடிவம் உருக்கொள்கிறது. புராணங்களின்படி விநாயகருக்கு 32 வடிவங்கள் உள்ளன. ஹேரம்ப கணபதி, உச்சிஷ்ட கணபதி, சித்தி-புத்தி கணபதி, நர்த்தன கணபதி, மஹாகணபதி என்றெல்லாம் பெயர்கள்; அதற்கேற்ப வடிவமெடுக்கிறார். வடிவம் கொள்வதற்கு முன்னால் அருவமாக இருந்து, வடிவம் மேற்கொண்டு வெளிப்பட்டுப் பின் மீண்டும் அருவவெளியில் கலந்து ஓங்கார ஸ்வரூபனாக நிற்பது அவரது தன்மை.
|