விருத்தாசலத்தில் 2,500 ஆண்டுகள் பழமையான விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கையை ஆண்டுக்கு 4 முதல் 6 முறை திறந்து காணிக்கை எண்ணப்பட்டு வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. ஆனால், கோவிலில் அன்னதானம் செய்ய விரும்புவோர், வங்கிக்கணக்கில் நேரடியாக தொகையை செலுத்தும் வகையில் ஸ்கேனர் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விருத்தாசலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சார்பில் உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்கு பதிலாக, ஸ்கேன் செய்து, நேடிரயாக வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தும் முறை நேற்று முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக, இன்று காலை 10:30 மணி முதல் 12:00 மணி ராகுகாலம் முடிந்ததும், நுாற்றுக்கால் மண்டபத்தில் நிகழ்ச்சி துவங்கியது. கோவில் செயல் அலுவலர் மாலா தலைமை தாங்கினார். மேலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். புதுச்சேரி ரீஜினல் மேலாளர் ஹரிதா, விருத்தாசலம் கிளை மேலாளர் கீதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உதவி மேலாளர்கள் ஜெயகாந்தன், சத்யா உட்பட கோவில் அலுவலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.