கோயில் நிலங்களின் விபரங்களை அனுப்ப டி.ஐ.ஜி.,களுக்கு பதிவுத்துறை தலைவர் உத்தரவு
பதிவு செய்த நாள்
25
ஆக 2025 10:08
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், வக்பு வாரியம் உரிமை கோரும் நிலங்கள் குறித்த விபரங்களை பட்டியலாக அனுப்ப வேண்டும் என, பதிவுத்துறை மண்டல டி.ஐ.ஜி.,க்களுக்கு, அந்த துறையின் தலைவரான, ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, தனியார் சிலர் அபகரிப்பதாக புகார்கள் எழுந்தன. அவற்றை பாதுகாக்கவும், அதுதொடர்பான பத்திரப்பதிவுகளை தடுக்கவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஹிந்து சமய அறநிலையத்துறை கோரிக்கை அடிப்படையில், கோவில் நிலங்களுக்கான சர்வே எண்களுக்கு, வழிகாட்டி மதிப்புகளை நீக்க பதிவுத்துறை நடவடிக்கை எடுத்தது. எனினும் சில இடங்களில், கோவில் நிலங்கள், நீக்கப்படாத வழிகாட்டி மதிப்புகளை பயன்படுத்தி, பத்திரப்பதிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வக்ப் வாரியத்திடம் இருந்து கடிதம் வந்ததாகக் கூறி, சில இடங்களில் சொத்துக்கள் பத்திரப்பதிவு செய்ய மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் நிலங்களை விற்க முடியாமல் தவிக்கின்றனர். மேலும், இனாம் முறை ஒழிப்பின் போது, பட்டா வழங்கப்பட்டதாக கூறி, சிலர் கோவில் நிலங்களை, தங்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ய முயற்சித்து வருகின்றனர். இந்த நிலங்கள் விஷயத்தில், உண்மை நிலவரம் தெரியாமல் முடிவு எடுத்தால் குழப்பம் ஏற்படும். எனவே, இனாம் ஒழிப்பு காலத்தில் வழங்கப்பட்ட பட்டா; கோவில் நிலம் என ஹிந்து சமய அறநிலையத்துறை அளித்த கடிதங்கள்; தனியார் பெயரில் பத்திரப்பதிவை நிறுத்தக்கோரி வக்பு வாரியம் அளித்த கடிதம் போன்றவற்றின் விபரங்களை, சார் - பதிவாளர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்களிடம் இருந்து பெற வேண்டும். அவற்றை பட்டியலாக தயார் செய்து, தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
|