ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று நிறைவடைந்தது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகபெருமான் அருள்பாளிக்கிறார். இக்கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, 48 நாட்கள் காலை, மாலை மண்டல பூஜை நடந்தது. மண்டல பூஜையின் கடைசி நாளான நேற்று காலை, மூலவர் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு, 1,008 கலச அபிஷேகம் நடந்தது. தொடந்து, பிரகார மூர்த்திகளான விஜய விநாயகர், சண்முகர், தேவி திரிபுரசுந்தரி கருமாரியம்மன், உற்சவ மூர்த்திகளுக்கு 108 சங்கு அபிஷேகம் நடைபெற்றது. மூலவர் மற்றும் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவராஜ் உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.