கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் தெப்பம் சுத்தம் செய்ய நடவடிக்கை தேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஆக 2025 11:08
ஆண்டிபட்டி; ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் தெப்பத்தில் உள்ள செடி,கொடிகள், குப்பையை அகற்றி மழைக்காலம் துவங்கும் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் 800 ஆண்டுகள் பழமையானது. கோயிலில் புனரமைப்பு பணிகளுக்கு பின் கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிதிலமடைந்த நிலையில் கிடந்த தெப்பம் உபயதாரர்கள் மூலம் ரூபாய் பல லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. கோயில் வளாகத்தில் மழைக்காலத்தில் கிடைக்கும் நீர் குழாய்கள் மூலம் சேகரிக்கப்பட்டு தெப்பத்தில் தேங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையில் தெப்பத்தில் தேங்கிய நீர் தற்போது குறைவான அளவில் உள்ளது. தெப்பத்தை சுற்றிலும் பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்பட்டாலும் குப்பை குவிந்து வருகிறது. தெப்பத்தில் தற்போது செடி கொடிகளும் அதிகம் வளர்ந்துள்ளது. குப்பையுடன் மழைநீர் தேங்கினால் தண்ணீரின் தன்மை பாதிப்படையும். மழைக்காலம் துவங்கு முன் தெப்பத்தை சுத்தம் செய்ய ஹிந்து அறநிலையத்துறை முன்வர வேண்டும்.