கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி அடித்து, கோவிலை சுற்றி வலம் வந்து விநாயகரை வணங்கியது.
நீலகிரி மாவட்டம், முகமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், ஆண்டு தோறும், விநாயகர் சதுர்த்தி விழா, சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா தெப்பக்காடு யானைகள் முகாமில் நேற்று, மாலை நடந்தது. இதற்காக வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றில் குளிக்க வைத்து, அலங்கரித்து மாலை அணிவித்து, வரிசையில் நிறுத்தப்பட்டது. .விழாவை முன்னிட்டு, அங்குள்ள விநாயகர் கோவிலில் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்தனர். தொடர்ந்து வளர்ப்பு யானைகள் கிருஷ்ணா, பொம்மி (முதல் முறை) தும்பிக்கையில் கோவில் மணியை பிடித்து அடித்தப்படி, கோவிலை மூன்று முறை சுற்றி வந்து விநாயகரை வணங்கியது. கோவில் முன் வரிசையாக நின்ற வளர்ப்பு யானைகள் பிளிரியப்படி தும்பிக்கையை உயர்த்தி விநாயகரை வணங்கியது. இந்நிகழ்வை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து, வளர்ப்பு யானைகளுக்கு வழங்கப்படும் வழக்கமான உணவுடன், பொங்கல், பழங்கள் வழங்கப்பட்டது. விழாவில் வனச்சகர் மேகலா, குலோ துங்கசோழன், பாஸ்கர், வன ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.