காரைக்கால் எல்லையம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2025 04:09
காரைக்கால்; காரைக்கால் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் எல்லையம்மன் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு பிறகு புதிய தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கடந்த 1976 ம் ஆண்டு முதல் தேரோட்டம் விழா நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மீனவ பஞ்சாயத்தார்கள் பெரும் முயற்சியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் செய்யும் பணி தொடங்கி பணிகள் முடிக்கப்பட்டது. இந்நிலையில் மீனவ கிராமத்தில் செல்வ விநாயகர்,பால தண்டாயுதபாணி, எல்லையம்மன், மாரியம்மன் கோவிலில் ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் புனராவர்த்தன மஹா கும்பாபிேஷகம் வரும் 4ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு நேற்று புனித நீர் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இன்று சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் புதிய தேர் வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான மீனவ மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுந்து சென்றனர்.முக்கிய வீதிகளில் சென்ற தேர் பின்னர் கோவிலுக்கு வந்தடைந்தது.