ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2025 05:09
திருச்சி; ஜனாதிபதி திரவுபதி முர்மு ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று (2ம் தேதி) 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். மைசூருவில் இருந்து நேற்று நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்த அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவருக்கு சிறப்பு விருந்தளித்து உபசரித்தார். இன்று காலை திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். பின்னர் ஹெலிகாப்டரில் மாலை 4 மணிக்கு திருச்சி வந்த ஜனாதிபதி, கொள்ளிடம் யாத்திரி நிவாஸ் அருகே அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் வந்திறங்கினார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ரெங்கநாதர் தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. ஜனாதிபதி வருகையை முன்னிட்டு மாலை 6 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.