பதிவு செய்த நாள்
04
செப்
2025
06:09
கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு.
தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது "ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.
மனர் என்ற சொல்லுக்கு அழகானவர், குள்ளமானவர் என்று பொருள். தேவகுரு பிருகஸ்பதி அளித்த யக்ஞோபவீதம்(பூணூல்) அவருடைய மார்பில் ஒளிவீசிக் கொண்டிருந்தது. கையில் கமண்டலமும், தண்டமும் ஞானத்தின் அடையாளமாக இருந்தன. பிரம்மச்சாரியான அந்த இளையவர், தன்னைக் காண வர மாட்டாரா என்று மகாபலி சக்கரவர்த்தி ஏங்கினான். பிரம்மதேஜஸ் நிரம்பிய முகத்துடன் வந்து கொண்டிருந்தார். மகாபலி அவரிடம்,தாங்கள் யாரென்று தெரியவில்லையே?, என்று கேட்டான். அதற்கு அபூர்வ: என்று பதிலளித்தார் வாமனர். இதன் பொருள், இதுவரை என்னைப் பார்த்திருக்கவும் முடியாது. நான் யார் என்பதைச் சொன்னாலும் புரியாது, என்பதே. இறைவனை யாராலும் அறிந்து கொள்ள முடியாது என்பதையே அபூர்வ என்ற சொல்லால் வாமனர் உணர்த்தினார்.
அசுரகுரு சுக்ராச்சாரியார், மகாபலிச்சக்கரவர்த்திக்காக விஸ்வஜித் யாகத்தை நடத்தினார். யாகபயனால் ஹோமகுண்டத்தில் இருந்து தேர்,வில், அம்புறாத்தூணி, பலவித கவசங்கள் கிடைத்தன. அவற்றுடன் மகாபலி தேவலோகம் சென்றான். தேவர்கள் அஞ்சி ஓடினர். தேவர்களின் தாய் அதிதி தன் பிள்ளைகளைக் கண்டு வருந்தினாள். காக்கும்கடவுள் விஷ்ணுவைச் சரணடைந்து,
யஜ்ஞேச யஜ்ஞ புருஷாச்யுத தீர்த்த பாத
தீர்த்த ச்ரவ: ச்ரவண மங்கள நாமதேயா
என்ற ஸ்லோகம் சொல்லி வழிபட்டாள். யாகங்களால் ஆராதிக்கப்படுபவனே! பழமை மிக்கவனே! புதுமையானவனே! கங்கையை திருவடியில் கொண்டவனே! ஆறு போல பெருகி அருள் பொழிபவனே! கல்யாண குணம் மிக்க திருநாமங்களைக் கொண்டவனே! என்பது இதன் பொருள். விஷ்ணு ஆவணி திருவோண நட்சத்திரத்தில், அதிதியின் மகனாக வாமனராகப் (குள்ள வடிவம்) பிறந்தார். மகாபலியிடமிருந்து தேவர்களைக் காப்பாற்றினார். அதிதி ஜெபித்த இந்த ஸ்லோகத்தைச் சொன்னால் குழந்தைகள் தாய் மீது பாசமுடன் திகழ்வர்.