பாலக்காடு; கேரள மக்கள், இன்று, ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, கேரளாவில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளா மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், இன்று, 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நேற்று முதல், நான்கு நாட்களுக்கு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்திராட நட்சத்திரம் நாளான நேற்று, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பாலக்காட்டில் அரசு சார்பு நிகழ்ச்சிகள், நேற்று மாலை 5:30 மணிக்கு, கலால் துறை அமைச்சர் ராஜேஷ் துவக்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஆரம்பமானது. அட்டப்பாடி மற்றும் மலம்புழா பூங்காவிலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், நேற்றிலிருந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. கேரளா அரசு கட்டடங்கள், கோவில்கள், முக்கிய பகுதிகள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. திருச்சூர் மாநகராட்சியில், செப்., 8ம் தேதி புலியாட்டம் நடக்கிறது. திருச்சூர் மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து, ஏராளமானோர், புலி, சிறுத்தை வேடமிட்டு, மேல தாளம் முழங்க வீதி உலா வர உள்ளனர். அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நிகழ்வையொட்டி நடைபெற உள்ளது. புலியாட்டத்தை கண்டு மகிழ தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து, அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் என்பதால், சிறப்பு பஸ்களை இயக்க, கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது.