தங்கபல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார் முருகப் பெருமான்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2025 11:09
திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவில் பாண்டியராஜாவாக பங்கேற்ற சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்கபல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்பினார்.
மதுரையில் நடந்த ஆவணி மூல திருவிழாவில் பங்கேற்பதற்காக சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து செப். 2ல் புறப்படாகினர். திருவிழா முடிந்து மதுரை சுவாமிகளிடம் திருப்பரங்குன்றம் சுவாமிகள் செப். 6ல் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை நெல்பேட்டை பகுதியில் உள்ள மண்டபத்தில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை அம்மன் எழுந்தருளினர். அங்கு அபிஷேகங்கள், பூஜை முடிந்து சர்வ அலங்காரமாகி பல்லக்கில் திருப்பரங்குன்றம் கோயில் வந்தடைந்தனர். வழக்கமாக சுவாமி மாலையில் பூ பல்லக்கில் புறப்பாடாகி இரவில் திருப்பரங்குன்றம் கோயில் வந்தடைவார். நேற்று சந்திரகிரகணம் ஏற்பட்டதால் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை மதியம் ஒரு மணிக்கு சாத்தப்பட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. அதனால் சுவாமி நேற்று காலையில் தங்க பல்லக்கில் மதுரையிலிருந்து புறப்பாடாகி மதியம் திருப்பரங்குன்றம் கோயில் வந்து அடைந்தார்.