நீலகிரி மாவட்டத்தின் வேளாங்கண்ணி என அழைக்கப்படும், குன்னூர் பாய்ஸ்கம்பெனி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், மாதா பெருவிழா கடந்த மாதம், 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி, ஜெபம் ஆகியவை நடந்தன. திருவிழா தினமான இன்று ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில், ஆலய பங்கு குரு ஆரோக்கிய ராஜ், உதவி பங்கு குரு கிளமென்ட் ஆண்டனி உட்பட குருக்கள் முன்னிலையில், கூட்டு திருப்பலி, மறையுரை நடந்தன. பெண் குழந்தைகள் தினத்தை வெளிப்படுத்தும் விதமாக, 15க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள், மாதா போன்று வேடம் அணிந்து திருப்பலியில், பங்கேற்றனர். பெண் குழந்தைகள் நலன் மற்றும் திறன்கள் குறித்து தெரிவிக்கப்பட்டு, வாழ்வில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்து, கேக் வெட்டப்பட்டது. குழந்தைகளுக்கு கேக் வழங்கப்பட்டது. மதியம் நடந்த அன்பின் விருந்து நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையுடன் பங்கு மக்கள் பங்கேற்றனர். உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இறையாசிருடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. திருவிழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை, துணை தலைவர் சகாயராஜ், செயலாளர் ரிச்சர்டு, பங்கு பேரவை உறுப்பினர்கள், பங்கு மக்கள் உட்பட பலர் செய்திருந்தனர்.