கலபுரகி மாவட்டம், கனகாபுரத்தில் உள்ளது ஸ்ரீ தத்தாத்ரேயர் கோவில். இது, கர்நாடகாவில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று. கலபுரகி நகரில் இருந்து, 50 கி.மீ.,யில் அமைந்துள்ளது. பீமா மற்றும் அமரஜா எனும் புனித நதிகள் சங்கமிக்கும் தலத்தில் அமைந்துள்ளது. இந்த புனித தலத்தை உலக புகழுக்கு கொண்டு சென்றவர் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி. தர்மாவதாரியாகக் கருதப்படும் இவர், வாடி எனும் ஊரிலிருந்து இங்கு வந்து, சுமார் 23 ஆண்டுகள் தங்கி, பக்தர்களுக்கு ஆன்மிக ஒளியை பரப்பினார்.
அவர் முதலில் பீமா – அமரஜா சங்கமத்தில் தவமிருந்து, பின்னர் ஊரின் மத்தியில் அமைந்துள்ள மடத்தில் தங்கி, பக்தர்களுக்கு ஆழமான போதனைகளை வழங்கினார். இந்த கோவிலில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் விக்ரஹங்களும் உள்ளன. இந்த கோவில், 500 ஆண்டு கால வரலாறு உடையது. மூலவராக ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள் உள்ளார். இங்கு தினமும் காலை முதலே பூஜைகள் ஆரம்பமாகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் இரவில் பல்லக்கு சேவை நடைபெறும். இதை காண ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இங்குள்ள ஷட்குல தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாகீரதி தீர்த்தம், பாபவிநாச தீர்த்தம், கோடி தீர்த்தம், ருத்ரபாத தீர்த்தம், சக்கர தீர்த்தம், மன்மத தீர்த்தம் ஆகிய எட்டு தீர்த்தங்களில் குளிப்பது பாவங்களை போக்கி புண்ணிய பலன்களை அளிக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு நடக்கும் ஸ்ரீ தத்த ஜெயந்தி, ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி புண்யதிதி ஆகிய இரண்டு விழாக்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். பலவித நோய்களால் அவதிப்படும் பக்தர்கள் இங்கு வந்து ஸ்ரீ குருசரித்ரம் பாராயணம் செய்து, நோய்களிலிருந்து விடுபடுகின்றனர்.
கோவில் அதிகாலை 3:00 மணியிலிருந்து இரவு 9:30 மணி வரை திறந்திருக்கும்.