கட்டட கலைக்கு பிரசித்தி பெற்ற லக்குந்தி நன்னேஸ்வரா கோவில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2025 10:09
கர்நாடகாவில் ஏராளமான பழங்கால கோவில்கள் உள்ளன. குறிப்பாக வடமாவட்டங்களில் வரலாற்று சிறப்புமிக்க, கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோவில்கள் அதிகம் இருக்கின்றன. இதில் ஒன்று நன்னேஸ்வரா கோவில். கதக்கின் லக்குந்தியில், 11ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட நன்னேஸ்வரா கோவில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கல்யாண சாளுக்கியர்களால் கட்டப்பட்ட இக்கோவில், கட்டட கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்து உள்ளது. இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் எழுத்துகள் 8 முதல் 13ம் நுாற்றாண்டு வரையிலான கன்னடம், சமஸ்கிருதத்தில் பொறிக்கப்பட்டு உள்ளன. ஹிந்து, சமண மரபுகளுக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.
அழகான துாண்கள், கர்ப்ப கிரகத்தில் சிறிய சிவலிங்கத்துடன் காட்சி அளிக்கும் கோவில் பக்தர்களை வெகுவாக கவருகிறது. பழங்கால கோவில் என்பதால் இந்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இந்த கோவிலுக்கு நேராக மேற்கு பகுதியில், பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதேஸ்வரர் கோவிலும் அமைந்திருப்பது சிறப்பு. நன்னேஸ்வரா கோவிலுக்குள் செல்ல இரண்டு நுழைவுவாயில் உள்ளன. ஒன்று கிழக்கு, மற்றொன்று தெற்கு திசையில் உள்ளன. தெற்கு வாயில் குறுகலாகவும், கிழக்கு வாயில் விரிவாகவும் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் கோவில் முன் நின்று உற்சாகமாக புகைப்படம் எடுத்து கொள்வதுடன், கட்டட கலையை கண்டு மெய்சிலிர்க்கின்றனர். கோவிலின் நடை தினமும் காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும்.
கதக் டவுனில் இருந்து 12 கி.மீ., துாரத்திலும், பெங்களூரில் இருந்து 400 கி.மீ., துாரத்திலும் கோவில் அமைந்து உள்ளது. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து கதக்கிற்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சேவை உள்ளது. ரயிலில் செல்வோர் கதக் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து கோவிலுக்கு வாடகை காரில் செல்லலாம்.