ஒரு கோவிலில் மூலவருக்கு, மற்ற சன்னிதிகளுக்கு தலா ஒரு மணி இருக்கும். ஆனால் உத்தர கன்னடாவில் முதற்கடவுளான விநாயகருக்கு லட்சக்கணக்கான மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. உத்தர கன்னடா மாவட்டம், எல்லாபூர் தாலுகாவில் அமைந்துள்ளது சந்துகுலி சித்தி விநாயகர் கோவில். இக்கோவில், 700 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. 300 – 350 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் ஆட்சி செய்து வந்த வடிராஜ ராஜாவின் மகனுக்கு, பேச்சு வரவில்லை.
அப்போது, இக்கோவிலை பற்றி கேள்விப்பட்ட அவர், கோவிலுக்கு விஜயம் செய்தார். சித்தி விநாயகரை மனமுருகி வேண்டி கொண்டார். தன் மகனுக்கு பேச்சு வந்தால், மணி கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே சில நாட்களில் அவரது மகன் பேச துவங்கினார். இதனால் மனமுருகிய ராஜா, தான் வேண்டியபடி, கோவிலில் மணி கட்டினார். அன்று முதல் இங்கு வரும் பக்தர்கள், தங்கள் வேண்டுதல் நிறைவேறும்பட்சத்தில், இங்கு மணி கட்டி, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதனாலேயே இதை, ‘கண்டே’ கோவில் என்றும் அழைக்கின்றனர். கண்டே என்றால் மணி என்று பொருள்.
மணியை கட்டுவது மட்டுமின்றி, தாங்கள் வேண்டும் காரியம் நிறைவேறுமா, இல்லையா என்பதையும் தெரிந்து கொள்ளவும் ஒரு வழி உண்டு. ஒரு சிறு வாழை இலையில், வெள்ளை பூவும்; மற்றொரு இலையில் சிவப்பு பூவும் கட்டி, சிறிய பாத்திரத்தில் போடப்பட்டிருக்கும். தங்கள் கஷ்டத்தை போக்கும் விநாயகரை நம்பி கோவிலுக்கு வரும் பக்தர்கள், அந்த பாத்திரத்தில் இருந்து ஒரு இலையை எடுப்பர். அதில் வெள்ளை நிற பூக்கள் இருந்தால், கஷ்டங்கள் தீரும் என்றும்; சிவப்பு நிற பூக்கள் வந்தால், தோஷம் இருப்பதாகவும் அர்த்தம். தோஷம் நீங்க வேறு சில பரிகாரங்களும் அல்லது மணியை கட்டலாம்.
திருமணமாகவில்லை என்றால், கணவன் – மனைவி தம்பதிகளாக இரண்டு மணிகளும்; பேச்சு வரவில்லை என்றால் ஒரு மணியும்; கல்வியில் சிறந்து விளங்க ஒரு மணியும் கட்டலாம். சிலர் தங்களால் இயன்ற அளவில் 1 கிலோவில், 2 கிலோவில், சிலர் 100 கிலோவிலும் மணியை கட்டுகின்றனர். இவ்வாறு தற்போது கோவிலில் லட்சக்கணக்கில் மணிகள் உள்ளன. இவர்களை முறையாக கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த மணிகளை விற்கவோ, உருக்கவோ, மாற்றவோ செய்வதில்லை. பக்தர்கள் கொடுக்கும் மணிகள் கோவிலிலேயே வைக்கப்படுகின்றன.
எப்படி செல்வது?
* பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்வோர், ஹூப்பள்ளி விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பஸ், டாக்சியில் 95 கி.மீ., பயணம் செய்து கோவிலுக்கு செல்லலாம்.
* ரயிலில் செல்வோர், ஆலனவர் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 75 கி.மீ., பயணம் செய்து கோவிலுக்கு செல்லலாம்.
* பஸ்சில் செல்வோர், எல்லாபூர் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள மாகோடாவில் இறங்க வேண்டும். அங்கிருந்து 2 கி.மீ., நடந்து கோவிலுக்கு செல்லலாம்.
* கோவில் திறப்பு: காலை 7:30 முதல் 9:30 மணி வரை அபிஷேகம், மதியம் 1:30 மணிக்கு பழங்கள், காய்கறிகள் சேவையும்; மாலை 4:30 முதல் இரவு 7:00 மணி வரை பூஜைகள் நடத்தப்படுகின்றன.
* சிறப்பு விழா: மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தியன்று காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். விநாயகர் சதுர்த்தியும் கோலாகலமாக கொண்டாடப்படும்.