திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கடைகள் ஏலம் விடப்படாததால், கோவில் நுழைவாயிலில் 20க்கும் மேற்பட்ட வெளிநபர்கள் கடையமைத்து வியாபாரம் செய்கின்றனர். இவர்கள், கோவிலுக்கு வருவோரைபொருட்களை வாங்க வற்புறுத்துவதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, அரசு விடுமுறை, வார விடுமுறை நாட்கள் மற்றும் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் மாந்தீஸ்வரர் பூஜை ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிகளவில் வருவர். பக்தர்களின் வசதிக்காக, கோவில் வளாகத்தில் பூ, பழம், கற்பூரம் விற்பனை செய்ய இரண்டு கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கடந்த ஜூன் மாதம் வரை கடை நடத்தி வந்தனர். ஏலம் முடிந்ததால், மறு ஏலம் எடுக்கும் வரை கடை மூடப்பட்டது. இதை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்ட உள்ளூர் வியாபாரிகள், பூ, பழம், காய்கறிகள், கோரைப்புல், கற்பூரம் என, ஆளுக்கொரு கடை அமைத்துள்ளனர். மேலும், தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை பக்தர்கள் கட்டாயம் வாங்க வேண்டும் என, வற்புறுத்தி வருகின்றனர். வாங்காமல் செல்வோரை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். இதனால், கோவிலுக்கு மன நிம்மதி தேடி வரும் பக்தர்கள் விரக்தியுடன் செல்கின்றனர்.
எனவே, பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை, வடாரண்யேஸ்வரர் கோவில் நுழைவாயிலில் இருந்து அகற்ற, அறநிலைய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.