வடபழநி ஆண்டவர் கோயிலில் பிரம்மாண்ட சக்தி கொலு; வரும் 22ல் துவங்குகிறது நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19செப் 2025 03:09
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலில் இந்த வருடம் ‛சக்தி கொலு பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட உள்ளது.
வரும் 22ம் தேதி (புரட்டாசி 6ம் தேதி திங்கட்கிழமை) முதல் அக் 01ம் தேதி வரை அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயிலில் சக்தி கொலு நடைபெற உள்ளது. அது சமயம் புரட்டாசி 6ஆம் நாள் 22.09.2025 திங்கட்கிழமை மாலை யாகசாலை பூஜைகள் தொடங்கி காலை, மாலை இருவேளையும் பூஜைகள் நடைபெற்றுப் புரட்டாசி மாதம் 15ஆம் நாள் புதன்கிழமை 01.10.2025 காலை 09.00 மணி முதல் 10.30க்குள் பூர்த்தியாகிறது. புரட்டாசி மாதம் 10ஆம் நாள் 26.09.2025 வெள்ளிக்கிழமை காலை 07.30 மணி முதல் 12.00 மணி வரை ஏகதின இலட்சார்ச்சனை தொடங்கி மாலை 04.30 மணி முதல் 08.30 மணி வரை நடைபெறவிருக்கிறது. இலட்சார்ச்சனையில் பங்குபெற விரும்பும் அன்பர்கள் அர்ச்சனை ஒன்றுக்கு ரூ.250/- செலுத்தி அம்பாளின் அருட்பிரசாதம் பெறலாம்.
கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவதுதான் நவராத்திரி விழா கொண்டாட்டத்தின் சிறப்பம்சம். நவராத்திரி விழா என்றதுமே நம் ஞாபகத்துக்கு வருவது கொலு பொம்மைகள்தான். வீடுகள், கோயில்களில் வைக்கப்படும் அழகழகான அர்த்தங்கள் நிறைந்த கொலு பொம்மைகளை பார்த்து ரசிப்பதில் இருக்கும் ஆன்மீக ஆனந்தமே தனிதான். பக்தர்கள் வேண்டுதலுடன் வழங்கும் பொம்மைகளை கொண்டு கொலு அமைக்கப்படுவது வடபழனி ஆண்டவர் கோயில் சக்தி கொலுவின் தனிச்சிறப்பு. கடந்த ஆண்டைப்போலவே பிரசித்தி பெற்ற கோயில்களின் மூலவர் சிலைகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்படவுள்ளன. அயோத்தி ராமரின் மூலவர் சிற்பமும் சக்தி கொலுவை அலங்கரிக்கவிருக்கிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு சன்னிதியில் தினமும் சிறப்பு பூஜைகள் நடக்கும். பிரபலங்கள் வழங்கும் ஆன்மீக சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகளுடன் கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.
தினசரி நிகழ்வுகள்;
அம்மன் கொலு மண்டபத்தில் சிறப்புப் பூஜை மற்றும் தீபாராதனை காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை மாலை 06.00 மணி முதல் 06.30 மணி வரை நடக்கிறது.
மாலை 05.00 மணி முதல் 05.30 மணி வரை; லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம்
மாலை 05.30 மணி முதல் 06.00 மணி வரை; வேதபாராயணம்
மாலை 06.00 மணி முதல் 06.30 மணி வரை; திருமுறை பாராயணம்
மாலை 06.30 மணி முதல் 07.00 மணி வரை; மகளிர் குழுவினரின் கொலு பாட்டு நடைபெற உள்ளது.
28.09.2025 - திருமுறை பாராயணம். மாலை 06.00 மணி முதல் 07.00 மணி வரை
ஏக தின லட்சார்ச்சனை: நவராத்திரி சிறப்பு நிகழ்வாக, மீனாட்சி அம்மனுக்கு, 26ம் தேதி காலை 7:30 மணி முதல் நண்பகல் 12:00 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணிவரையிலும் ஏகதின லட்சார்ச்சனை நடக்க உள்ளது. இதில், பங்கேற்க விரும்புவோர், கோவில் அலுவலகத்தில், 250 கட்டணம் செலுத்தி ரசிது பெற்றுக் கொள்ளலாம்.
கொலு பார்வை நேரம்: கொலுவை காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை பார்வையிடலாம். கண்காட்சி நேரத்தில், ஆன்மிக வினாடி – வினா நடத்தப்படும் அதில் பங்கேற்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வித்யாரம்பம்; வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரியின் நிறைவாக, அக்., 2ம் தேதி விஜயதசமியன்று குழந்தைகளை முதல் முறையாக பள்ளிகளில் சேர்ப்போர் மற்றும் முதலில் எழுத பழக்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், இரண்டரை வயது முதல் மூன்றரை வயது வரை உள்ள குழந்தைகளின் விரல் பிடித்து, ஆரம்ப கல்வியை துவக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.
நவராத்திரி விழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகளும், இரவு 07.00 முதல் 08.30 வரை சொற்பொழிவு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. அம்மன் கொலு சன்னதியில் சிறப்புப் பூஜை மற்றும் தீபாராதனை, சிறப்புப் பூஜை காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை மாலை 06.00 மணி முதல் 06.30 மணி வரை நடைபெறம்.
கொலுவில் உற்சவர் அம்மனுக்குத் தினமும் அந்த நாளுக்குரிய சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்யப்படும். கொலுவில் அம்மன் தரிசனம் பார்த்து விட்டு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தினமும் பிரசாதம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை தக்கார் ல.ஆதிமூலம், துணை ஆணையர் / செயல் அலுவலர் இரா. ஹரிஹரன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.