பொள்ளாச்சி; திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த தாளக்கரையில், ஹொய்சாளர் பேரரசின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த தாளக்கரையில், இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் நடத்திய ஆய்வில், ஹொய்சாளர் பேரரசின் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவன இயக்குனர் நாராயணமூர்த்தி கூறியதாவது: தாராபுரம் அடுத்த தாளக்கரை அருகே வயல்வெளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், சதுர வடிவில் கல்துாணின் நான்கு பக்கமும், மேற்புறமும் திருவிடையாட்டக் கல்வெட்டு கண்டறியப்பட்டது. திருவிடையாட்டம் என்பது வைணவக்கோவில்களுக்கு அளிக்கப்படும் நிலக்கொடை. இவ்வாறு கொடை அளிக்கப்படும் நிலங்களின் மீது உரிமைக்காகவும், அடையாளத்துக்காகவும் ஊன்றப்படும் கல் ‘திருவாழிக்கல்’ என்று அழைக்கப்பட்டது. இந்த கல்வெட்டு, ஹொய்சாளர் பேரரசன் மூன்றாம் வீரவல்லாளனின், 35ம் ஆட்சி ஆண்டில், 13ம் நுாற்றாண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கூறினார்.