காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில் அமைந்துள்ள, துாப்புல் வேதாந்த தேசிகரின் 757வது புரட்டாசி திருவோண நக்ஷத்திர வார்ஷீக மகோத்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடக்கும் உத்சவத்தில் தினமும், காலையில் தங்க பல்லக்கில் வெவ்வேறு திருக்கோலத்திலும், மாலையில், பல்வேறு வாகனத்திலும், எழுந்தருளும் துாப்புல் வேதாந்த தேசிகர், முக்கிய வீதி வழியாக உலா வருகிறார். இதில், ஏழாம் நாள் உத்சவமான இன்று காலை 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய வேதாந்த தேசிகர் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். மாலை ராமர் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், 10ம் நாள் உத்சவமான நாளை மறுநாள், விளக்கொளி பெருமாள் மங்களாசாஸனமும், தேவாதிராஜன் பெரிய தங்க பல்லக்கில் பேரருளாளன் மங்களாசாஸனத்திற்கு அஞ்சலி திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார். அக்., 3ம் தேதி காலை, கந்தப்பொடி வசந்தமும், தீபபிரகாசருக்கு விமான உத்சவமும், இரவு புஷ்ப பல்லக்குடன் 11 நாட்கள் நடக்கும் துாப்புல் வேதாந்த தேசிகரின் வார்ஷீக மஹோத்ஸவம் நிறைவு பெறுகிறது.