செஞ்சி; செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் திருவூடல் உற்சவம், திருவாசக தெய்வீக மாநாடு மற்றும் திருவாசகம் எழுதிய சிவனடியார்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.
திருவண்ணாமலை திருப்பெருந்துரை அடியார்கள் குழு சார்பில் உலகம் முழுவதும் உள்ள சிவனடியார்கள் வீட்டில் இருந்து திவாசகம் எழுதும் வழிபாட்டை அறிமுகம் செய்துள்ளனர். இந்த வழிபாட்டில் 16 நாடுகளில் உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் திருவாசகம் எழுதியுள்ளனர். திருவாசகம் எழுதியவர்களுக்கு அந்தந்த பகுதியில் விழா நடத்தி சான்றிதழ் வழங்கி வருகின்றனர். செஞ்சி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று திருவூடல் விழா, திருவாசக தெய்வீக மாநாடு மற்றும் திருவாசகம் எழுதியவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு திருவண்ணாமலை சாலை ‘பி’ ஏரி அருகில் இருந்து கைலாய வாத்தியங்களுடன், சிவனடியார்களுடன் தில்லை கூத்தபெருமான் ஊர்வலம் நடந்தது. 11:30 மணிக்கு கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் முன் மாணிக்கவாசகர், திருவாசகத்தை நிறைவு செய்த பின், தில்லை கூத்தபிரானுடன் ஜோதியாக கலக்கும் திருவூடல் நிகழ்ச்சி நடந்தது. ஊர்வலம் காசி விஸ்வநாதர் கோவிலில் நிறைவடைந்தது.
தொடர்ந்து நடந்த தெய்வீக மாநாட்டிற்கு திருப்பணிக்குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர், பொருளாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை திருப்பெருந்துரை அடியார்கள் குழு நிறுவனர் சிவக்குமார் சிறப்புரை நிகழ்த்தி திருவாசகம் எழுதிய 56 சிவனடியார்களுக்கு சான்றிதழ் வழங்கினார். கலைவாணி மெட்ரிக் பள்ளி தாளாளர் ரங்கநாதன் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் திருப்பணிக்குழு துணை தலைவர்கள் பாலகிருஷ்ணன், துரைக்கண்ணு, இணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைச் செயலாளர் நாராயணன், பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், திருப்பணிக்குழுவினர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்றனர்.