ஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், கருட கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான நேற்று மாலை தங்கத்தேரோட்டம் நடந்தது. முன்னதாக காலையில் அனுமன் வாகனத்தில் மலையப்பசுவாமி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஏழாவது நாளான இன்று காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சூரிய பிரபை வாகனத்தில் இறைவனை தரிசித்தால், செல்வச் செழிப்பு, நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் குழுக்கள், பஜனை, கோலங்கள், மங்கள வாத்தியங்களுக்கு நடுவே இறைவனின் வாகனசேவை கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா.. கோபாலா கோஷத்துடன் வழிபாடு செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு, ஸ்ரீமலையப்ப சுவாமி சந்திரபிரப வாகனத்தில் வலம் வருவார். விழாவில் திருமலை ஸ்ரீ பெரிய ஜீயர்சுவாமி, ஸ்ரீ சின்னஜீயர் சுவாமி, தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் அனில் குமார் சிங்கால், ஜெ.இ.ஓ வி. வீரபிரபம், சி.வி.எஸ்.ஓ கே.வி. முரளிகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் வாகன சேவையில் பங்கேற்றனர். பிரம்மோத்சவத்தின் எட்டாவது நாளான நாளை புதன்கிழமை காலை 7 மணிக்கு ரதோத்சவம் சிறப்பாக நடைபெற உள்ளது.