வாயில்லா ஜீவன்களில் முதலில் வைத்து போற்றப்படுவது பசு. அடிவயிற்றில் இருந்து ‘அம்மா’ என வாய்விட்டுக் குரல் கொடுக்கும் அதுவே நமக்கெல்லாம் அம்மாவாக இருக்கிறது. நாம் குழந்தையாக இருக்கும் போது பாலுாட்டி உயிரூட்டியவள் நம்மை பெற்றெடுத்த தாய். ஆனால் நம் வாழ்நாள் முழுவதும் நமக்கு பால் தருபவள் கோமாதா எனப்படும் பசு மட்டுமே. இதனால் தான் அன்பும் சாந்தமும் நிறைந்த பசுவைப் பார்த்தால் பெற்ற தாயை பார்ப்பது போன்ற உணர்வு உண்டாகிறது. அதுமட்டுமல்ல. பசுவின் பாலில் இருந்து பெறப்படும் தயிர், மோர், நெய் ஆகியவை உடலிற்கு பலம் தருகிறது. இதற்காகவே முன்னோர்கள் கோமாதாவின் மீது அன்பும் பக்தியும் செலுத்தி வந்தனர்.
ஆனால் சிலர் பால் தரும் காலத்தில் பசுவை பராமரித்து விட்டு, கறவை நின்றதும் அதை புறக்கணிக்கின்றனர். இப்படி செய்வது மகா பாவம். கனவிலும் இதைச் செய்யக் கூடாது. மேலும் பசு இறந்த பின்னும் கூட பயன்தருகிறது. அதன் வயிற்றில் இருந்து கிடைக்கும் ‘கோரோசனை’ என்னும் வாசனை திரவியம் பூஜை பொருளாகப் பயன்படுகிறது. இது சித்த மருத்துவத்திலும் மருந்தாக உள்ளது. ஆனால் உயிருடன் வாழும் காலத்தில் பசுவை அதிகம் துன்புறுத்தினால் அதன் உடலில் கோரோசனை சுரக்காது.