பதிவு செய்த நாள்
12
அக்
2025
06:10
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச கல்யாணிக்கு திருமணம் செய்து வைத்தனர்.
பல்லடத்தை அடுத்த, கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு ராகவுண்டம்பாளையம் கிராமத்தில், மழை பொழிய வேண்டி, கிராம மக்கள் நூதன வழிபாடு மேற்கொண்டனர். அங்குள்ள ராஜ விநாயகர் கோவிலில், தேசிங்கு ராஜா -பஞ்ச கல்யாணி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வைபவம் கோலாகலமாக நடந்தது.
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கோடங்கிபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் விவசாயத் தொழில் பரவலாக நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்பாகவே துவங்க வேண்டிய பருவமழை இன்னும் வரவில்லை. நிலத்தடி நீர்மட்டம், ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. எனவே, ஊர் மக்கள் ஒன்று கூடி ஆலோசித்து, முன்னோர்கள் மேற்கொண்ட பஞ்ச கல்யாணி திருமணம் செய்ய தீர்மானித்தோம். இதன்படி, அம்பல கூத்தனான தேசிங்கு ராஜாவுக்கும், வேதநாயகியான பஞ்ச கல்யாணிக்கும் ராஜ விநாயகர் கோவிலில் நேற்று (நேற்று முன் தினம்) திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று (நேற்று) தேசிங்கு ராஜாவுக்கும்- பஞ்ச கல்யாணிக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. முன்னோர்கள் மேற்கொண்ட இந்த வழிபாட்டின் பயனாக மழை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.
முன்னதாக, நேற்று பட்டினி சீர், உருமால் கட்டுதல், முகூர்த்தக்கால் நடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று காலை, 10.45 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன், மங்கல இசையுடன் தேசிங்கு ராஜா- பஞ்ச கல்யாணி அனைத்து வரப்பட்டனர். மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என, ஊர்மக்கள் சீர்வரிசை எடுத்து வர, மாலை மாற்றுதல், சிறப்பு வேள்வி வழிபாடு ஆகியவை நடந்தன. இதனை தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க தேசிங்குராஜா- பஞ்ச கல்யாணிக்கு திருமண வைபவம் நடந்தது. கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து மழைச்சோறு எடுக்கும் நிகழ்வு நடந்தது. மழை வேண்டி நடந்த இந்நிகழ்வில் ஊர்மக்கள் பலரும் உற்சாகத்துடன் பங்கேற்க, அனைவருக்கும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது.