பதிவு செய்த நாள்
28
டிச
2012
12:12
பெரும்பாலான ஆலயங்களின் நுழைவாயிலில் மணி தொங்கவிடப்பட்டிருக்கும். ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் முதலில் மணியை ஒலிக்கச் செய்து பிறகு இறைவனை தரிசித்து பிரார்த்தனை செய்வார்கள். மணியை அசைப்பதால் எழும் ஒலி, மங்களகரமான ஒரு ஓசையாகக் கருதப்படுகிறது. மணி அசைக்கும் பொழுது ஓம் என்ற ஒலி எழும்புகிறது. இது பிரபஞ்சமெங்கும் நிறைந்து விளங்கும் இறைவனின் பொதுவான திருநாமம். இறைவன் மங்கள வடிவினன். ஆகவே, அந்த இறைவனின் தரிசனம் பெற நமக்குள்ளேயும் வெளியேயும் மங்களகரமாய் இருக்க வேண்டும். ஆரத்தி எடுக்கப்படும்போது மணியோசை எழுப்புகிறோம். சில நேரங்களில் மணியுடன் சங்கு மற்றும் பிற இசைக்கருவிகளையும் ஒலிக்கச் செய்வது உண்டு. இவ்வாறு ஒலியை எழுப்புவதற்கு மற்றொரு காரணம். அச்சமயத்தில் ஏதேனும் அமங்கலமான ஓசையோ அல்லது தெய்வீக சூழ்நிலைக்கு ஒவ்வாத ஓசையோ, பேச்சோ எழுமானால் அவை மணி, சங்கு இவற்றின் ஓசையில் வெளிப்படாமல் போய் விடும். வீடுகளில் பூஜை வேளையில் மணியடிக்கிறோம். இதற்குக் காரணமும், வீட்டில் ஒரு தெய்வீக சூழலை உண்டாக்கவே!
மங்கல மணியோசை மனதில் பக்திப் பரவசத்தை உண்டாக்க வல்லது; மகிழ்ச்சி தருவது. அமைதி அளிப்பது! பூஜையின் போது நாம் மணியை ஒலிக்கும் வேளையில் சொல்ல வேண்டிய மந்திரம் ஒன்று உபநிடதத்தில் வருகிறது. நான் இம்மணியை ஒலிக்கச் செய்து தெய்வ அனுக்கிரகத்தை வேண்டுகிறேன். உன்னதமான, தூய்மையான சக்திகள் எனது இல்லத்திலும் உள்ளத்திலும் சேரட்டும். என் உள்ளும் புறமும் தீயசக்திகள் இருப்பின், அவை வெளியேறட்டும்!