பதிவு செய்த நாள்
28
டிச
2012
12:12
நீறு என்ற சொல் வடமொழியில் பஸ்மம் எனப்படும். இதற்கு நம் பாவங்களை அழித்து இறைவனை நமக்கு நினைவூட்டும் ஒன்று என்று பொருள். ப என்றால் பர்த்ஸ்னம் (அழித்தல்) ஸ்ம என்றால் ஸ்மரணம் (நினைத்தல்) ஆகவே பஸ்மத்தை அணிவது தீயவற்றின் அழிவையும் தெய்வத்தின் நினைப்பையும் குறிக்கிறது. பஸ்மம் விபூதி என்றழைக்கப்படுகிறது. விபூதி என்றால் மகிமை அல்லது பெருமை என்று பொருள். பஸ்மத்தை அணிபவருக்கு அது பெருமை சேர்ப்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. பஸ்மத்திற்கு ரøக்ஷ என்ற பெயரும் உண்டு. அணிபவரை அது நோய்களிலிருந்தும் தீயனவற்றிலிருந்தும் காப்பாற்றிப் பாதுகாக்கிறது. ஹோமா என்பது புனித மந்திரங்களை உச்சரித்தவாறு ஹோமத்தீயில் பொருட்களை இறைவனுக்குப் படைப்பது. இச்செயல் நான் என்னும் தன்னலத்தை மையமாகக் கொண்ட அனைத்து ஆசைகளையும் ஞானம் அல்லது தன்னலமற்ற நோக்கம் என்ற தீயினில் இடுவதைக் குறிக்கும். இச்செயலால் பெறப்படும் மனத்தூய்மையைத்தான் வெண்மையான நீறு குறிக்கிறது.
ஞானத் தீயில் படைக்கப்படும் பொருட்களால் எரிக்கப்படுவது நமது அறியாமை, சோம்பலான மந்தத்தன்மை ஆகியவை! நாம் நீறாகிய சாம்பலை அணிவது, இந்த உடலையே நான் எனக் கருதும் தவறான எண்ணத்தை (அறியாமையை) அழித்து, பிறப்பு- இறப்பு என்ற தளைகளிலிருந்து விடுபட்டு நாம் சுதந்தரம் அடைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது. மேலும், இந்த உடல் அழியக் கூடியது என்பதையும் இந்த உடலின் மீது பற்று வைத்து மயங்கக் கூடாது என்பதையும் சாம்பல் உணர்த்துகிறது. பஸ்மம் சிவபெருமானுடன் இணைத்துப் பேசப்படுவது. சிவபிரான் தன் உடல் முழுவதும். சாம்பல் பூசியவாறு காட்சியளிப்பவர். சிவபக்தர்கள் பஸ்மத்தை மூன்று கோடாக தரிப்பர். பஸ்மத்தின் நடுவில் குங்குமப் பொட்டுடன் அணிந்தால், அத்திலகம் சிவ-சக்தி ரூபத்தைக் குறிக்கும் பஸ்மத்திற்கு மருத்துவ குணம் உண்டு. பலவித ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பதில் அது பயன்படுத்தபடுகிறது. திருநீறை நெற்றியில் பூசுகையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று உபநிடதங்கள் கூறுகின்றன.
அந்த மந்திரத்தின் பொருள்: நம்மையெல்லாம் காத்து ரட்சித்து, நமது வாழ்வில் இன்ப மணம் வீச அருளும் அந்த முக்கண்ணனாகிய சிவபெருமானை நாம் வணங்குகிறோம். நன்கு பழுத்த வெள்ளரிக்காய் தனது காம்பிலிருந்து விடுபட்டு கீழே விழுவது போல், அந்த இறைவனும் நம்மைத் துயரம், நிலையற்ற தன்மை, மரணம் ஆகிய தளைகளிலிருந்து விடுவிப்பாராக!