வேலூர் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ளது வன்னிவேடு. இத்தலத்தின் மூலவர் அகத்தீஸ்வரர்; அம்பாள் புவனேஸ்வரி. இக்கோயிலில் நீங்கள் எந்தத் தெய்வத்தின் முன் நின்று வணங்கினாலும், உங்கள் தலைக்கு மேல் ராகு-கேது உருவங்கள் காணப்படும். இங்கு அம்மன் பீடம் ஆவுடையார் மேல் அமைக்கப்பட்டுள்ளதும் சிறப்பு. அஷ்ட திக்பாலகர்கள் கோயிலைச் சுற்றி நிறுவப்பட்டிருக்க, சனிபகவான் வன்னி மரத்தடியில் அருள்பாலிக்கிறார்.
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய ஐந்துவகை நீரைப் பயன்படுத்துவார்கள். அவை, வில்வம் ஊறிய நீர், ரத்தினங்கள் இட்ட நீர், வாசனை திரவியங்கள் கலந்த நீர், தருப்பைப்புல் இட்டுவைத்த நீர், பழச்சாறு கலந்த நீர் ஆகியவையே. இவை முறையே வில்வோதகம், ரத்னோதகம், கந்தோதகம், குசோதகம், பலோதகம் என அழைக்கப்படுகின்றன.